12 மாதங்களில் 75,000 டெங்கு நோயாளர்கள்
28 Dec,2022
நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 75,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த 4 வாரங்களாக நாளொன்றுக்கு சுமார் 300 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இதனைக் கருத்திக் கொண்டு வெள்ளிக்கிழமை (30) மற்றும் சனிக்கிழமை (31) ஆகிய இரு தினங்களையும் டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்து கடந்த 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 75,434 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இரு மடங்கை விட அதிகமாகும். கடந்த 4 வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தீவிர அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளொன்றுக்கு சுமார் 200 - 300 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இதே நிலைமை தொடருமானால் 2023 ஜனவரிக்குள் நாடளாவிய ரீதியில் பாரியளவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். டெங்கு நோயைப் பரப்பக் கூடிய நுளம்புகள் நாட்டின் பல பகுதிகளிலும் பரந்தளவில் வியாபித்துள்ளதாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டுக்குள் டெங்கு நோய் பாரியளவில் பரவுவதை தடுப்பதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியமை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய 2023 இல் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களையும் டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டு மக்கள் அனைவரும் தமது சுற்றுச்சூழலில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் காணப்பட்டால் , அவற்றை உடனடியாக தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போன்று தொழில் புரியும் இடங்களையும் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும் ஜனவரி 2ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையால் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் தூய்மைப்படுத்தல் பணிகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளின் போது பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உரிய வழிகாட்டல்களை வழங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.