படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், அவர் சடலமாக கிடந்த காரிலிருந்து கண்டுபிக்கப்பட்ட 11 கைவிரல் ரேகைகள் பதிவு செய்துள்ளதுடன், அது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஷாப்டர் குற்றுயிராய் மீட்கப்பட்ட அவரது டப்ளியூ. பி. - கே.யூ. 8732 என்ற காரை பூரணமாக பரிசோதித்துள்ள கைவிரல் ரேகை நிபுணர்கள் 11 அல்லது அதனை அண்மித்த எண்ணிக்கையிலான கை விரல் ரேகைகளின் பதிவுகளை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்த பகுப்பாய்வு அறிக்கையினை, குற்றப் பதிவுப் பிரிவூடாக கைவிரல் ரேகை நிபுணர்கள் விசாரணையாளர்களுக்கு கையளித்துள்ளனர்.
அதில் ஷாப்டரை வைத்தியசாலையில் அனுமதித்த பொரளை பொது மயானத்தின் ஊழியரினதும், அவரது உதவியாளரின் கைரேகைகள் காணப்படுவதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
இந் நிலையில் குறித்த அறிக்கைக்கு மேலதிகமாக, தொலைபேசி அழைப்பு பட்டியல் மற்றும் கோபுரத் தகவல்களை மையப்படுத்திய பகுப்பாய்வுகள், சி.சி.ரி.வி. பகுப்பாய்வுகள், வங்கிக் கணக்கு பகுப்பாய்வு நடவடிக்கைகள் தொடர்வதாக விசாரணையாளர்கள் குறிப்பிட்டனர்.
குறிப்பாக சி.சி.ரி.வி. பகுப்பாய்வுகளின் போது, பெருப்பிக்கப்பட்ட சமீப புகைப்படங்கள் ஊடாக காருக்குள் சந்தேகத்துக்கிடமான சில விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உறுதியாகவும் தெளிவாகவும் தெரிந்துகொள்ள விசாரணையாளர்கள் அறிவியல் தடயவியல் பிரிவின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர்.
அதன்படி உரிய தரப்பினரின், உரிய தொழில் நுட்பத்தை இதற்காக பெற்றுக்கொள்ள சி.ஐ.டி.யினர் நடவடிக்கை டுத்துள்ளனர்.
சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த சிறப்பு விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இதுவரை சந்தேக நபர் எவரும் உறுதியான சாட்சியங்களின் பிரகாரம் அடையாளம் காணப்படவில்லை. அதன்படி இது குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.
கடந்த சனிக்கிழமை 24 ஆம் திகதி, சி.ஐ.டி.யினரின் கோரிக்கை பிரகாரம் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, இலக்கம் 39, பிளவர் வீதி கொழும்பு - 7 எனும் முகவரியில் அமைந்துள்ள தினேஷ் ஷாப்டரின் வீட்டுக்கு சென்று பகுப்பாய்வு செய்திருந்தது.
இதன்போது, தினேஷ் ஷாப்டரின் கழுத்தை இறுக்க பயன்படுத்தப்பட்டிருந்த வயரினை ஒத்த, அவ்வயரின் மற்றைய பகுதியாக இருக்கலாம் என சந்தேக்க முடியுமான அன்டனா வயர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
ஷாப்டரின் தாயாரின் வீட்டின் தொலைக்காட்சி அன்டனா வயரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனைவிட கைகளைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஒருவகை பிளாஸ்டிக் பட்டிகளை ஒத்த 8 பட்டிகள் ஷாப்டரின் அறையின் இலாச்சி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனைவிட, ஷாப்டர் தனது மனைவியின் தாயாருக்கு, மனைவியின் குண நலன்களை வர்ணித்து நன்றி கூறி எழுதிய கடிதம் ஒன்றும், அதனை ஒத்த குறுஞ்செய்தி ஒன்று தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
பல நிறுவனங்களின் உரிமையாளரான தினேஷ் ஷாப்டர், பல கோடி ரூபாவை பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்துள்ளமையும் அவற்றினால் எதிர்பார்த்தபடி இலாபமீட்ட முடியாமல் நாளுக்கு நாள் அவரது வியாபாரம் நஷ்டமடைந்து வருவதும் நெருங்கிய சிலரின் வாக்கு மூலங்கள் ஊடாக தெரியவந்துள்ளது.
மேலும், ஷாப்டர் வசித்த கறுவாத்தோட்டம், பிளவர் வீதியில் உள்ள வீட்டை விற்பனை செய்வதாக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தமை தொடர்பிலும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.
இவற்றை மையப்படுத்தியும் ஷாப்டரின் குடும்பத்தாரின் வாக்கு மூலங்கள் பலவற்றை மையப்படுத்தியும் ஷாப்டரின் மரணம் தற்கொலையா என்ற கேள்வி ஊடகங்கள் வாயிலாக எழுப்பட்டுள்ளன.
எனினும் இது தொடர்பில் விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தில் இருக்கும் நிலையில், கொலையா, தற்கொலையா என முடிவுக்கு இதுவரை விசாரணையாளர்கள் வரவில்லை எனவும் அவ்வாறு தீர்மானிக்க போதுமான தடயங்கள் இல்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந் நிலையில், ஷாப்டரின் மர்ம மரணத்தை தற்கொலையாக சித்திரிக்க ஒருவர் அல்லது ஒரு குழு முயறுள்ளதா? தற்போது எவரேனும் அவ்வாறு முயற்சிக்கின்றனரா என்பது குறித்தும் விசாரணையாளர்களின் அவதானம் திரும்பியுள்ளது.