பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ள நபர் ஒருவரை சி.ஐ.டி. சிறப்புக் குழுவொன்று 24 மணி நேரம் கண்காணித்து வருகிறது.
குறித்த நபர் தொடர்பில் இதுவரையில் உறுதியான சாட்சியம் ஒன்று விசாரணையாளர்களுக்கு கிடைக்காத நிலையிலேயே, அவரைக் கைதுசெய்யாது பல கோணங்களில் சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டி.ஜி.எச். பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட முன்னர், கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்புக் குழுவொன்று பூரணமாக பரிசீலித்து வருவதாகவும் அவரது தொலைபேசி அழைப்புக்கள் உள்ளிட்டவற்றையும் அக்குழு ஆராய்ந்து வருவதாகவும் அறிய முடிகின்றது.
குறித்த நபரை இதுவரை விசாரணை செய்யாத விசாரணையாளர்கள், விசாரணைகளை தவறாக வழி நடாத்த குறித்த நபர் முயன்றுள்ளதாக குறிப்பிட்டனர்.
இந் நிலையில் உறுதியான சாட்சியத்தை வெளிப்படுத்த தொலைபேசி பகுப்பாய்வு நடவடிக்கைகளை மிக ஆழமாக முன்னெடுக்கும் சி.ஐ.டி. சிறப்புக் குழு, தொடர்ச்சியாக 24 மணி நேரமும் அந் நபரின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக அறிய முடிகிறது.
அவ்வாறு உறுதியான தடயம் கிடைக்கும் பட்சத்தில் அந் நபரை கைதுசெய்ய தயங்கப் போவதில்லை எனக்கூறும் விசாரணையாளர்கள், சந்தேகத்துக்கு இடமான பல கோணங்களில் விசாரணை நடப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.
இதனிடையே, இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 60 இற்கும் அதிகமான வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவின் தகவல்கள் படி, தொலைபேசி இலக்க பகுப்பாய்வுகள், சி.சி.ரி. பகுப்பாய்வுகள், வங்கிக் கணக்கு பரிசீலனைகள், ஆவண பகுப்பாய்வுகள் ஆகியவற்றுக்கு, பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் தனித்தனி குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு 24 மணி நேரமும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.
' இது மிக ஆழமான விசாரணை. எமக்கு சிறிது கால அவகாசம் வேண்டும். நாம் மனிதப் படுகொலை தொடர்பில் குற்றம் சுமத்த முடியுமான வகையில் சாட்சிகளை வெளிப்படுத்திக்கொண்டே சந்தேக நபரைக் கைது செய்ய முடியும்.' என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ வீரகேசரியிடம் தெரிவித்தார்.
51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், ஜனசக்தி காப்புறுதி குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளுக்கு சொந்தக் காரர் ஆவார். பொரளை பொது மயான வளாகத்தில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.