ஐக்கிய தேசிய கட்சி , பொதுஜன பெரமுன கூட்டணி என்பது புதிய விடயமல்ல. கடந்த ஜனாதிபதி தேர்தலில் இவ்விரு கட்சிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இன்றும் இரு தரப்பும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அரசியல் இலாபத்திற்காக மாத்திரமே பயன்படுத்திக் கொண்ட அரசாங்கம் இன்று அதனை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறது.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேசமட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து , பொறுப்பு கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
குருணாகலில் சனிக்கிழமை (17) நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தற்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையப் போவதாக பொதுஜன பெரமுனவும் , பொதுஜன பெரமுனவுடன் இணையப் போவதாக ஐக்கிய தேசிய கட்சியும் கூறிக் கொண்டிருக்கிறது. இவர்கள் இதனை புதிதாக கூற வேண்டிய தேவை கிடையாது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் இவ்விரு கட்சிகளும் இணைந்து தான் தமது விளையாட்டுக்களை காண்பித்தன என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
அன்று அமைக்கப்பட்ட கூட்டணி இன்று காணப்படுகின்றமையின் காரணமாகவே , 134 பேர் இணைந்து ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தனர். நாட்டுக்கு மாற்று வழியொன்று உள்ளது. தூய்மையற்ற கூட்டணியுடன் முன்னோக்கிச் செல்வதா அல்லது தூய்மையான கொள்கையுடையவர்களுடன் தெளிவான பயணத்தில் ஒன்றிணைவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
மத்திய வங்கி, சீனி, வெள்ளைப்பூண்டு, தேங்காய் எண்ணெய், சமையல் எரிவாயு, நிலக்கரி கொள்ளையர்களுடன் முன்னோக்கி பயணிப்பதா? அவ்வாறில்லை எனில் நாடு எதிர்காலத்தில் இந்த நிலைமையை அடையும் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த எம்மை வெற்றி பெறச் செய்வதா? ஐக்கிய மக்கள் சக்தியே நாட்டுக்காக காணப்படும் ஒரேயொரு மாற்று வழியாகும்.
நாம் அரசியல் கட்சி என்ற ரீதியில் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கின்றோம். ஜனநாயக ஆட்சியின் கீழ் தீ மூட்டுதல் , அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள் என்பவற்றை தோல்வியடையச் செய்ய வேண்டும். பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட எந்தவொரு நபர் மீதான தனிப்பட்ட தாக்குதல்களின் மூலமோ அல்லது பொது அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதன் மூலமோ அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
நாட்டின் மாணவர் சமுதாயத்தை பயங்கரவாதிகளாகவும் , போதைப்பொருள் பாவனையாளர்களாகவும் காண்பிக்க அரசு முயற்சிக்கிறது. தற்போது பாடசாலை மாணவர்களின் புத்தக பைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களது பைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனவா என்று கேட்க விரும்புகின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முழு அரசாங்கமும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அன்று வீரர்களைப் போல் பேசியவர்கள் , பதவிகளை ஏற்றதன் பின்னர் அதனை மறந்துவிட்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டனரே தவிர , அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.
சட்டம் மற்றும் ஒழுங்கில் காணப்படுகின்ற பாரதூரமான பலவீனமே பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தீவிரமடையக் காரணமாகும். மாணவர்களின் பைகளில் போதைப்பொருட்களை தேடுவதைப் போன்று , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை தேடுவதற்கும் முன்னுரிமையளிக்குமாறும் வலியுறுத்துகின்றேன்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேசமட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து , பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்றார்.