சிறையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுவியுங்கள் - சம்பிக்க
15 Dec,2022
பிரபாகரனுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகச் செயற்பட்ட குமரன் பத்மநாதன், கருணா அம்மான் போன்றவர்கள் வௌியில் இருக்கிறார்கள். எனவே, தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தெரிவிக்கும் 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, சிறைச்சாலையில் உள்ள இராணுவ வீரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதிபர் தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
சர்வகட்சி தலைவர்கள் மாநாட்டில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுக்கப்பட வேண்டும்; சிறைச்சாலைகளில் உள்ள முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்; காணாமலாக்கப்பட்டோர் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பபட்டுள்ளன.
மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரால் இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களாகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் அந்த இயக்கத்துக்கு தலைமை ஏற்றிருந்த குமரன் பத்மநாதன் வௌியில் இருக்கிறார். ராமன், நகுல், கருணா போன்றவர்களும் வௌியில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் சிறைச்சாலையில் உள்ள 31 முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் இராணுவத்தினரையும் விடுதலை செய்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
மேலும் அரசியலமைப்பு தொடர்பில் இதன்போது பேசப்பட்டது. அது தொடர்பில் நாடாளுமன்றத்துக்குள்ளேயே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். பொருளாதாரப் பிரச்சினையால் கஸ்டத்தில் உள்ள தமிழர்கள் படகுமூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்கிறார்கள். கஸ்டத்தில் உள்ள சிங்களவர்கள் வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்கிறார்கள். பணமுள்ளவர்கள் விமானங்கள் மூலம் வேறு நாடுகளுக்கு செல்கிறார்கள்.
எனவே, பொருளாதாரப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும், தேர்தல் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் எந்தவிதமான இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. மீண்டும் ஜனவரி மாதம் சர்வகட்சிக் கூட்டம் நடைபெறும் என்றார்.