சுற்றுலா பயணிகள் விரும்பும் நாடு - இலங்கையின் தரவரிசையில் ஏழாவது இடம்
சுற்றுலாப் பயணிகளுக்கான நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆர்டன் கபிட்டலின் (Arton Capital's தரவரிசைப்படி நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகின் நட்புறவான பயண இடமாக முதலாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எளிதாக விசா பெறுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு தகவல்களை வழங்குதல், தகவல்களை புதுப்பித்தல், திறந்த தன்மை போன்றவை இந்த தரவரிசையில் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
மாலைதீவு, கிழக்கு திமோர், கத்தார், கம்போடியா போன்ற நாடுகளும் இந்த தரவரிசையில் முன்னணியில் உள்ளன.
சிறிலங்கன் எயார் லைன்ஸ் தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம்
பெருந்தொகை நட்டத்தில் இயங்கிவரும் சிறிலங்கன் எயார் லைன்ஸ் தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில்,
சிறிலங்கன் எயார்லைன்ஸ், சிறிலங்கன் கேட்டரிங் மற்றும் கிரவுண்ட் ஹேண்ட்லிங் நிர்வாகம் (Ground handling) இணைந்து எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்குவதா அல்லது தனித்தனியாக வழங்குவது குறித்து விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கும்.இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான வழிகாட்டல்களை திறைசேரியின் குழுவொன்று வழங்கும் என்றும் அதன் பின்னர் அமைச்சரவை இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்படவுள்ளது. பெருந்தொகையில் நட்டத்தில் இயங்கும் சிறிலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய அமைச்சர், நிறுவனத்தை மறுசீரமைப்பதை தேசிய மக்கள் சக்தி மட்டுமே எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடன்பட்டுள்ளதாகவும், விமான சேவைக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் 51 சதவீத பங்குகளை அரசாங்கத்திடம் வைத்து விமான நிறுவனம் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது என்றார்.