இலங்கையில் மனைவி முன்னிலையில் கொடூரமாக கொல்லப்பட்ட கணவன்
01 Dec,2022
காலி ஹிக்கடுவை, வேவல பிரதேசத்தில் உணவகம் ஒன்றுக்கு எதிரில் கணவன் மற்றும் மனைவி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் கூறியுள்ளனர்.
இன்று பிற்பகல் கறுப்பு நிற காரில் வந்த மூன்று பேர், மனைவி, மனைவியை கூரிய ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். ஹிக்கடுவை திராணகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் சுற்றுலாத் தொழில் துறையில் ஈடுபட்டு வந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் கொல்லப்பட்ட நபர், தனது மனைவியுடன் உணவகத்திற்கு எதிரில் உள்ள வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, காரில் வந்த நபர்கள் கூரிய ஆயுதங்களால், அவர்களை வெட்டியுள்ளனர்.
இரண்டு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வரும் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று கொலை செய்யப்பட்ட நபர், நான்கு வருடங்களுக்கு முன்னர் அவருக்கு எதிரான தரப்பை சேர்ந்த ஒருவரை கூரிய ஆயுதத்தினால், தாக்கி படுகாயத்தை ஏற்படுத்தியுள்ளார். அதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலையாளிகள் வந்த கார் வீதியில் கைவிடப்பட்ட நிலையில், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹிக்கடுவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.