இலங்கையில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக இருக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று சமர்பித்தார்.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 அளவில் கூடிய வேளையில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், அடுத்த வருடத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப உதவியளிக்குமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது.
நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், மூலதனச் சந்தை, ஏற்றுமதி சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகள் குறித்து, இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு செலவுத்திட்ட இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் சமூக நலன்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தனியார் துறையை கட்டியெழுப்புவதற்கான கொள்கை பின்புலத்தை உருவாக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் நவீன உலகிற்கு ஏற்ற நவீன பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை ஆரம்பிப்பதன் மூலம் இளைஞர்களுக்கான நாட்டை கட்டியெழுப்பும் புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.
அடுத்த வருடம் பொருளாதாரத்தை ஸ்திரதன்மைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய அறிவிப்பு
நிதி அமைச்சர் என்ற விதத்தில், ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய அம்சங்களின் தொகுப்பு.
ஏற்றுமதி ஊடான பொருளாதாரம், சுற்றாடல் ஆகியவற்றை இலக்காக கொண்ட டிஜிட்டலை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்குவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யும் வகையிலான சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை குறைப்பு, நிவாரணம் போன்றவை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.
வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு முதலீடு இல்லாது போயுள்ளமை தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகத்தின் ஊடாக இலாபத்தை தமதாக்கிக் கொள்ள உலக சந்தையில் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு சீனா, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுடன் தொடர் வர்த்தக தொடர்புகளை முன்னெடுக்க கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகின்றது.
முதலீட்டுக்கான சூழலை உருவாக்குவதற்கு அவசியத்தை ஏற்படுத்துவதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள், தனியார் உரிமையாளர்களை உள்வாங்கி, விவசாயத்துறைக்கு தனியார் சட்டத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நவீன விவசாய ஏற்றுமதியை ஊக்குவிக்க எதிர்த்துள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உருவாக்கி, மேம்படுத்துவதற்கு விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
கறுவா ஏற்றுமதியை ஊக்குவிக்க பிரத்தியேக திணைக்களமொன்றை ஸ்தாபிப்பதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவற்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச சேவை பிரிவுகள் குறித்து பரிசீலனை செய்வதற்கு புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
வரி மறுசீரமைப்பு குறித்து புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையில் பாதிக்கப்படுவோரை பாதுகாக்கும் வகையில் விசேட காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவை உருவாக்குவதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இரத்தினக்கல் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு புதிய வலயங்களை உருவாக்குதல் மற்றும் புதிய தொழில்பயிற்சிளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்புக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலநிலை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை ஊக்குவித்து, இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
விநியோக உலகத்தின் முதல் 70 நாடுகளுக்கு மத்தியில் இலங்கையை கொண்டு செல்வதற்காக 2023ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரையான மூன்று ஆண்டு காலத்திற்கு விநியோக சேவை வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நீண்டகால நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் மோட்டார் வாகனங்களை தயாரித்தல் மாத்திரமன்றி, இலத்திரனியல் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
18 வருட சேவை காலத்தை நிறைவு செய்த படையினருக்கு ஓய்வூதியத்தை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
வரி அறவீடுகளை அதிகரிப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. வட் வரி அதிகரிப்பு கட்டாயம் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த வரி அதிகரிப்பின் ஊடாக பணம் அச்சிடுவதை நிறுத்த முடியும் என அவர் கூறுகின்றார்.