பிள்ளையான் தரப்பினர் அம்பலப்படுத்திய முன்னாள் செயலாளர்!
22 Oct,2022
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரால் அபகரிக்கப்பட்ட காணிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காணி விவகாரம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மீள்குடியேற்ற அமைச்சின் முன்னாள் செயலாளர் பொ.ரவீந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர் கந்தையா யோகவேல் உள்ளிட்ட அக்கட்சியின் சில உறுப்பினர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பல ஏக்கர் காணிகள் அடாத்தாக பிடிக்கப்பட்டு காணி உறுதிகள் பெறப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தளவாய் சவுக்கடி பகுதியில் இவ்வாறு அடாத்தாக பிடிக்கப்பட்ட காணிகளுக்கு தங்களது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி முறையற்ற விதத்தில் காணி உறுதி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் உணர்வார்கள் அமைப்பின் தலைவர் ஊடாக இந்த காணிகள் பிடிக்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர், முன்னாள் உப செயலாளர் உள்ளிட்ட பலருக்கு இந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்திரகாந்தனின் செயலாளராக இருந்த அசாத் மௌலானா என்பவர் ஒரு காணி பிரச்சினையில் என்னை தொடர்புபடுத்தி கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதன் போது நீங்கள் பிள்ளையான் அண்ணனுடன் மோதுகின்றீர்கள். உங்களை எப்போதோ ஒரு நாள் பழி வாங்கியே தீருவோம் என்று மிரட்டும் தொனியில் தெரிவித்திருந்நதார்.
அந்த பழிவாங்கல் தான் இப்போது நடைபெறுகிறதா என்று என்னை சிந்திக்க தூண்டுகிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.