இலங்கை அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை
29 Sep,2022
அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு கட்டிடங்களை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ராஜபக்சே குடும்பத்தினர் அரசு உயர்பதவிகளில் இருந்து விலகினர். அதன்பின் போராட்டங்கள் குறைந்து இருந்த நிலையில் சமீபத்தில் மாணவ அமைப்பினர் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். இலங்கையில் தற்போது வரை உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது. இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட தடை
விதிக்கப்பட்டு உள்ளது. உணவு பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் மயக்கம் அடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்ட உத்தரவில், ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கூறப்படுவதை சுகாதார அமைச்சர் ரம்புலெல்லா மறுத்தார். அரசியல் உந்துதல் காரணமாக பொது சுகாதார ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை கூறுவதாக தெரிவித்தார்.