தேசிய பாதுகாப்பை உறுதி செய்யவே உயர் பாதுகாப்பு வலயங்கள்!
26 Sep,2022
தேசிய பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பாகும். அதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. எனவே தான் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்தினை ஏற்படுத்தி , அதன் ஊடாக பாராளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த எவரேனும் முயற்சிப்பார்களாயின் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேசிய சபை தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து சபாநாயகர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வார். பொதுஜன பெரமுனவானது மக்கள் மத்தியில் கீழ் மட்டத்திலிருந்து ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ள கட்சியாகும்.
இது தொடர்பில் கட்சி மட்டத்திலும் , தேசிய சபையிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை எடுப்போம். ஏனைய கட்சிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்காமை அவரவரின் தனிப்பட்ட தீர்மானமாகும். இது தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி அவர்கள் தீர்மானங்களை எடுப்பர்.
நாட்டில் தேசிய பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். ஏதேனுமொரு வகையில் கலவரக்காரரர்கள் பாராளுமன்றத்தைக் கைப்பற்றுமிடத்து , நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்படும். சில கட்சிகள் கூட பாராளுமன்றத்தைக் கைப்பற்ற முயற்சித்தவர்களுக்கு தலைமை வகித்தன. இதனை எவரும் மறுக்க முடியாது. காரணம் குறித்த கட்சியின் உறுப்பினர்கள் அந்த இடத்தில் காணப்பட்டனர்.
எனவே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. நாட்டு மக்களின் பாதுகாப்பே தேசிய பாதுகாப்பாகும்.
எனவே அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுப்பார். நாம் எந்த சந்தர்ப்பத்திலும் கலவரங்களில் ஈடுபடவில்லை. ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையுமே நடத்தியுள்ளோம். அன்று சுமார் 10 இலட்சம் மக்களை காலி முகத்திடலுக்கு அழைத்து வந்த போது , எம்மாலும் அவ்வாறு செயற்பட்டிருக்க முடியும்.
எனினும் நாம் அதனை செய்யவில்லை. கலவரத்தின் மூலம் அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் என்று நாம் எண்ணவில்லை.
பொதுஜன பெரமுன ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒரு கட்சியாகும். எனவே ஜனநாயக ரீதியில் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொதுஜன பெரமுனவின் தலைவராவார். அவரது தலைமைத்துவத்திலேயே நாம் கட்சியை மறுசீரமைப்போம் என்றார்.