கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைது
12 Sep,2022
போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டு
போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி பிரான்ஸ் மற்றும் தென்னாபிரிக்காவிற்கு செல்ல முயன்ற ஈரானிய பிரஜை மற்றும் சோமாலிய பிரஜை என இருவர் இன்று (செப்.11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
43 வயதான ஈரானிய பிரஜை இன்று அதிகாலை 12.40 மணியளவில் பிரான்சின் பாரிஸ் நகருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-563 இல் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
26 வயதான சோமாலிய நாட்டவர் நேற்று (செப். 10) இரவு 08.40 மணியளவில் துருக்கி ஏர்லைன்ஸின் டி.கே. - 731 விமானம் மூலம் துருக்கியின் இஸ்தான்புல்லுக்குச் சென்று அங்கிருந்து பிரேசிலின் சாவ் பாலோ ஊடாக தென்னாபிரிக்காவுக்கு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அதில் செல்ல முயற்சித்துள்ளார்.
குடிவரவு திணைக்கள அதிகாரிகள்
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களை எல்லை ஆய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.
அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனையில், அவர்கள் சமர்ப்பித்த பிரான்ஸ் மற்றும் தென்னாபிரிக்க கடவுச்சீட்டுகள் பொய்யான தகவல்களுடன் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மேலதிக விசாரணைகளின் போது, தான் ஈரானிய பிரஜை எனவும், அந்த நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பிரான்ஸ் தப்பிச் செல்ல வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானிய பிரஜையின் உண்மையான கடவுச்சீட்டு கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தின் இருக்கையில் இருந்ததாகவும்,சோமாலிய பிரஜையின் உண்மையான கடவுச்சீட்டை அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்