இலங்கையில் 3 மாணவர் இயக்க தலைவர்கள் தீவிரவாத தடுப்பு சட்டத்தில் கைது
24 Aug,2022
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர் இயக்க தலைவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. இதில் பல்வேறு மாணவர் இயக்கத்தினர் பங்கேற்றனர். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிபர் மாளிகை முன்பு காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக வேறு வடிவில் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். இதற்கிடையே கடந்த 18-ந்தேதி தலைநகர் கொழும்பில், பல்கலைக்கழகங்களின் மாணவர் கூட்டமைப்பு சார்பில் பேரணி நடந்தது. இதில் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் மாணவர்கள் இயக்க தலைவர்கள் 3 பேர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனை போலீசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறும்போது, 'போராட்டக்காரர்கள் திடீரென்று இப்போது எப்படி தீவிரவாதிகள் ஆனார்கள்? மாணவர்களின் எதிர்ப்பை பயங்கரவாதம் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே குறிப்பிடுகிறார் என்றால் அவரும் பயங்கரவாத வழிமுறைகளை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தார் என்று அர்த்தமல்லவா?' என்றார்.