இலங்கை திரும்புகிறார் 'மாஜி' அதிபர் கோத்தபய?
24 Aug,2022
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவது தொடர்பாக, அவருடன் அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசியதாக கூறப்படுகிறது. இந்த வாரத்தில் அவர் நாடு திரும்புவார் என கூறப்படுகிறது.
நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த நாட்டின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பினார்; அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார். ஆசிய நாடுகளான மாலத்தீவு, சிங்கப்பூர் சென்ற அவர் தற்போது தாய்லாந்தில் உள்ளார்.
இந்நிலையில், நாடு திரும்புவது தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவுடன், அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வாரத்தில் அவர் நாடு திரும்பலாம் என்று கூறப்படுகிறது.
கோத்தபய விரைவில் நாடு திரும்ப உள்ளதாக, அவரது உறவினர் ஒருவர் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருந்த நிலையில், தற்போது அதிபர் மாளிகையில் இருந்து வெளியாகும் செய்திகளும், அதை உறுதிப் படுத்தி உள்ளன. இலங்கையில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் கோத்தபய நாடு திரும்பினால் மீண்டும் போராட்டம் வெடிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.