இலங்கை துறைமுகத்தில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம்.. சீனா எச்சரிக்கை
12 Aug,2022
இலங்கை துறைமுகத்தில் சீனா உளவு கப்பல்இலங்கை துறைமுகத்தில் சீனா உளவு கப்பல்
இலங்கை விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என சீனா வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் சீனாவின் உளவு கப்பல் வருகை தருவது தொடர்பாக இந்தியா, சீனா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே பூசல் நிலவி வருகிறது.
சீனாவின் உளவு கப்பலான யுவான் வங் 05 என்ற கப்பல் இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வருகை தருவதாக கடந்த மாதம் இறுதியில் தகவல் வெளியானது. இந்த உளவு கப்பலின் வருகை என்பது இந்திய எல்லை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என இந்தியா இலங்கையிடம் கூறி கப்பல் வருகையை தடுக்கும் முயற்சியில் களமிறங்கியது. இந்தியாவின் அழுத்தத்தை ஏற்று இலங்கை வெளியுறவுத்துறையும் சீனாவை தொடர்பு கொண்டு உளவு கப்பலை ஹம்பன்தோட்டை துறைமுகத்திற்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தியது.
இந்தியாவின் இந்த செயலுக்கு சீனா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீனா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை என்பது இறையாண்மை கொண்ட நாடு. அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவது முறையல்ல. இலங்கை சீனா உறவில் மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையற்ற ஒன்று. மேலும், அணி சேராக் கொள்கையின் படி இலங்கை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த நாட்டுடனும் உறவு வைத்திருக்கலாம்.எனவே, உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளது.
இந்நிலையில், சீனா தான் திட்டமிட்டபடி, உளவு கப்பலை ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு இன்று அனுப்பிவைக்கிறது. அங்கு எரிபொருளை நிரப்பிய பின்னர் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று தான் துறைமுகத்தை விட்டு கப்பல் கிளம்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன உளவு கப்பலின் நகர்வை இந்தியாவும் கூர்ந்து கவனித்து வருகிறது. 2007ஆம் ஆண்டு கட்டப்பட்ட யுவான் வாங்க் 5 உளவு கப்பல் 11,000 டன் பொருள்களை வைத்திருக்கும் திறன் கொண்டுள்ளது.