இலங்கைக்கு புதிய கடன் : உலக வங்கி கைவிரிப்பு
30 Jul,2022
'நாட்டின் பொருளாதார மீட்சிக்கு தேவையான கொள்கைகளை செயல்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய கடன்கள் வழங்கப் போவது இல்லை' என, உலக வங்கி அறிவித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது. இதையடுத்து, அந்நாடு கடந்த ஏப்ரலில் அன்னிய கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் திவால் நிலைக்கு ஆளானது. இலங்கைக்கு அடுத்த ஆறு மாதங்களில், 37 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கை அரசு, பொருளாதார மீட்சிக்கு தேவையான கொள்கைகளை வகுத்து, அதன்படி செயல்பட்டால் தான் புதிய கடன்களை வழங்க முடியும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இலங்கை மக்கள் நலனுக்காக, அத்தியாவசிய பொருட்களுக்கு தேவையான நிதியை, தற்போதைய கடன்களை மறுசீரமைத்து வழங்கத் தயாராக உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன், 'சீனா உட்பட கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து இலங்கை பேச்சு நடத்தி நெருக்கடிக்கு தீர்வு காணும் பட்சத்தில் புதிய கடன் வழங்கப்படும்' என, சர்வதேச நிதியம் தெரிவித்திருந்தது.
எதிர்கட்சியினருடன் பேச்சு
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய அரசை அமைக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எதிர்க் கட்சிகளுடன் நடத்தி வரும் பேச்சு, ஒருவாரத்தில் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.