ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த 20 பேர் அடையாளம் காணப்பட்டனர்!
27 Jul,2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேரை இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட காணொளிகள் ஊடாகவே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வலுக்கட்டாயமாக இல்லத்திற்கு நுழைந்தவர்கள் மற்றும் இல்லத்திற்குள் நுழைய வழிவகுத்தவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் தலைமையகத்தினால் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், சந்தேக நபர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்களின் உதவியை நாடவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சந்தேக நபர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தியதன் பின்னர், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் கடந்த 9ஆம் திகதி தீக்கிரையாக்கப்பட்டது.
தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் மகன் மறுநாள் துபாய் சென்றுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் துபாயில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.