சுமார் மூன்று தசாப்தங்களாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வசப்படாமல் இருந்துவந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி இன்றைய தினம் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கைகளுக்கு வந்துசேர்ந்திருக்கிறது.
மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் நாட்டைவிட்டு தப்பியோடிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்துகொண்டு கடந்தவாரம் பதவியைத் துறந்ததையடுத்து காலியான ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு இன்று சபையில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் விக்கிரமசிங்கவுக்கு 134 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவுக்கு 3 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியின் தன்னந்தனி உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்துகொண்டு விக்கிரமசிங்க ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுனவின் ஆதரவை நம்பியே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.
அவருக்கு கிடைத்திருக்கும் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தேர்தலில் தங்கள் நிலைப்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள் உத்தியோகபூர்வமாக எடுத்திருந்த நிலைப்பாடுகளுக்கு மாறாக அவற்றின் உறுப்பினர்களில் கணிசமானவர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
விக்கிரமசிங்கவை ஆதரிக்கப்போவதாக பொதுஜன பெரமுன ஆரம்பத்தில் இருந்தே கூறிக்கொண்டுவந்தபோதிலும் அதன் தவிசாளரான வௌயுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அழகப்பெருமவையே ஆதரித்தார்.
அவரைப் பின்பற்றி பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அந்த கட்சியின் அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த அழகப்பெருமவுக்கு வாக்களிக்கவில்லை. ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.
பொதுஜன பெரமுனவின் அதிகப்பெரும்பான்மையான உறுப்பினர்கள் ராஜபக்சாக்களின் விருப்பப்படி விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
அந்த கட்சியின் பாராளுமன்றக் குழு ராஜபக்சாக்கள் ஆட்சியதிகாரத்தில் இல்லாவிட்டாலும் கூட அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இன்னமும் இருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
விக்கிரமசிங்க நாளையதினம் இலங்கையின் 8 வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பதவிப்பிரமாணம் செய்யவிருக்கிறார்.
இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையின் 44 வருடகால வரலாற்றில் பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலமாக தெரிவுசெய்யப்பட்ட முதல் ஜனாதிபதியாக விக்கிரமசிங்க விளங்குகிறார்.
1993 மே தினத்தன்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அன்றைய பிரதமராக இருந்த டி.பி.விஜேதுங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார்.7 நாட்களுக்குள் கூடிய பாராளுமன்றம் அவரது பதவியை ஏகமனதாக அங்கீகரித்தது.
விஜேதுங்க ஜனாதிபதியாகியதையடுத்து காலியான பிரதமர் பதிக்கு விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.
அதுவே அவர் பிரதமராக பதவியேற்ற முதல் சந்தர்ப்பமாகும்.1994 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலில் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் பொதுஜன முன்னணி வெற்றிபெறும் வரையில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்தார்.
அவரையடுத்து பிரதமராக பதவியேற்ற திருமதி குமாரதுங்க இரு மாதங்களுக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அவரை எதிர்த்து ஜக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட காமினி திசாநாயக்க கொழும்பில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அவரின் மனைவி திருமதி சிறிமா திசாநாயக்கவையே கட்சி வேட்பாளராக நிறுத்தியது.
காமினி திசாநாயக்கவுக்கு அடுத்த தலைவராக கட்சிக்குள் இருந்த விக்கிரமசிங்க அந்த நேரத்தில் திருமதி குமாரதுங்கவை எதிர்த்துப் போட்டியிட முன்வரவில்லை.
1994 பிற்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையை விக்கிரமசிங்க பொறுப்பேற்றார்.
27 வருடங்களாக தலைவராக இருந்துவரும் அவர்தான் ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்றில் மிக நீண்டகாலம் தலைமைப்பதவியையும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் வகித்தவராக விளங்குகிறார்.
ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒருவருடம் முன்னதாக 1999 டிசம்பரில் இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்கு ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்.
அதுவே விக்கிரமசிங்க களமிறங்கிய முதல் ஜனாதிபதி தேர்தலாகும். கொழும்பு நகர மண்டப மைதானத்தில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் திருமதி குமாரதுங்க காயமடைந்ததையடுத்து ஏற்பட்ட அனுதாப அலை அந்த தேர்தலில் மீண்டும் அவருக்கே வெற்றியைக் கொடுத்தது.
ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவின் முதல் தோல்வியாக அது அமைந்தது.
மீண்டும் 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச போட்டியிட்டபோது இரண்டாவது தடவையாக விக்கிரமசிங்க களமிறங்கினார்.
ராஜபக்சவுக்கோ அல்லது விக்கிரமசிங்கவுக்கோ பெரும் ஆதரவு அலை இருக்கவில்லை. திருமதி குமாரதுங்கவின் ஆட்சியில் 2001 டிசம்பரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றதையடுத்து பிரதமரான விக்கிரமசிங்க 2002 முதல் நோர்வேயின் அனுசரணையுடன் விடுதலை புலிகளுடன் போர்நிறுத்தத்தைச் செய்துகொண்டு முன்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த மகிந்த ராஜபக்ச அதையே ஜனாதிபதி தேர்தலில் தனது பிரதான பிரசார தொனிப்பொருளாக்கி சிங்கள கடும்போக்கு சக்திகள் மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே. வி.பி.) போன்ற அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்டார்.
தமிழ்ப்பகுதிகளில் குறிப்பாக வடக்கில் விடுதலை புலிகள் அந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்களிப்பதை தடுத்திருக்காவிட்டால் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருப்பார் என்பது நிச்சயம்.
மகிந்த ராஜபக்ச 28 ஆயிரம் வாக்குகளை குறைவாக பெற்றிருந்தால் ஜனாதிபதியாக தெரிவாகுவதற்கு தேவையான 50.1சதவீத வாக்கு எல்லையை தாண்டியிருக்கமாட்டார். தன்னை தேர்தலில் தோற்கடித்தது பிரபாகனே என்று விக்கிரமசிங்க வெளிப்படையாகஎப்போதும் சொல்வார்.
ஜனாதிபதி ராஜபக்ச தனது முதலாவது பதவிக்காலத்தில் விடுதலை புலிகளுடனான போரில் வெற்றிபெற்றைதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றவராக இருந்த சூழ்நிலையில் இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக் கேட்டு 2010 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்.
ஏற்கெனவே இரு தடவைகள் தோல்வியைச் சந்தித்த விக்கிரமசிங்க அந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
போர்வெற்றி காரணமாக தென்னிலங்கை மக்கள் மத்தியில் ராஜபக்ச பேராதரவைக் கொண்டவராக விளங்கியதால் அவருக்கு போட்டியாக போர்வெற்றிக்கு உரிமை கொண்டாடக்கூடிய முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிரணிக் கட்சிகள் அவற்றின் பொதுவேட்பாளராக களமிறக்கின.
ஆனால், அவரால் ராஜபக்சவை தோற்கடிக்கமுடியவில்லை.
தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் 18 வது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவந்து அதுவரை ஜனாதிபதிக்கு இருந்த இரு பதவிக்கால வரையறையை இல்லாமல் செய்த மகிந்த ராஜபக்ச மூன்றாவது பதவிக்காலத்துக்கும் ஜனாதிபதியாக விரும்பி 2015 ஜனவரியில் தேர்தலை நடத்தினார்.
அதிலும் விக்கிரமசிங்க போட்டியிடவில்லை.தன்னால் வெற்றிபெற முடியாது என்பது அவருக்கு தெரிந்திருந்தது.
மீண்டும் ராஜபக்சவுக்கு எதிராக எதிரணி கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக அவரின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேனவை எதிரணி கட்சிகள் நிறுத்தின.
ஐக்கிய தேசிய கட்சியினதும் சிறுபான்மைச் சமூகங்களினதும் வாக்குகள் இல்லாவிட்டால் சிறிசேன அந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவதை விக்கிரமசிங்க தொடர்ச்சியாக தவிர்த்து வந்ததால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் அவரின் தலைமைக்கு எதிராக கிளர்ச்சிகள் உருவாகத்தொடங்கின.
அந்த கிளர்ச்சிகளின் முன்னணியில் கரு ஜெயசூரிய,சஜித் பிரேமதாச ஆகியோர் நின்றனர்.
ஜெயசூரிய ஒரு தடவை நாட்டுப் பிரிவினையைத் தடுப்பதற்காக ராஜபக்சாக்களின் போர் நடவடிக்கைகளை ஆதரிக்கவேண்டியது கடமை என்று கூறிக்கொண்டு 15 க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டிக்கொண்டு ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரானார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான முக்கிய அரசியல்வாதிகள் படிப்படியாக விக்கிரமசிங்கவை விட்டு விலகினர்.
அவரின் தலைமையின் கீழ் கட்சியினால் தேர்தல்களில் வெற்றிபெற முடியாது என்று அவர்கள் நம்பினார்கள்.
சஜித் பிரேமதாச தொடர்ந்தும் உள்ளுக்குள் இருந்துகொண்டே போர்கொடி தூக்கியவண்ணம் இருந்தார்.
2015 –2019 சிறிசேன — விக்கிரமசிங்க அரசாங்கத்தின் குளறுபடிகள் காரணமாக ராஜபக்சாக்கள் மீண்டும் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெறத்தொடங்கியபோது மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தை விக்கிரமசிங்க கொண்டிருக்கவில்லை.
மீண்டும் எதிரணியின் பொதுவேட்பாளர் ஒருவருக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்கக்கூடிய நிலைமை உருவாவதை பிரேமதாச அணியினர் விரும்பவில்லை. இறுதியில் பிரேமதாசவே கோதாபய ராஜபக்சவை எதிர்த்து 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.
ஆனால் வெற்றிபெற முடியவில்லை.முன்னைய ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்ற எவருமே பெற்றிராத அளவுக்கு கூடுதல் வாக்குகளை கோதாபய பெற்று அமோக வெற்றி பெற்றார்.
அடுத்து 2020 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தல் வந்தது. ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிக அண்மித்தான வெற்றியைப் பெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய பிரேமதாச தனது தலைமையில் சமகி ஜன பலவேகய என்ற கட்சியை அமைத்து பாராளுமன்றத்தில் 54 ஆசனங்களைப் பெற்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான அரசியல்வாதிகளும் ஆதரவாளர்களும் பிரேமதாசவின் புதிய கட்சியுடனேயே சென்றனர்.
ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் வரைபடத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டது.ஒரு பாராளுமன்ற ஆசனத்தைக்கூட அதனால் கைப்பற்ற முடியவில்லை.
நாடுபூராவும் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரேயொரு தேசிய பட்டியல் ஆசனமே கட்சிக்கு கிடைத்தது.
அதுவும் கூட சுமார் ஒரு வருட காலம் நிரப்பப்படாமல் இருந்து கடந்த வருடம் ஜூனில் விக்கிரமசிங்க அதைப் பயன்படுத்தி பாராளுமன்றம் வந்தார்.அதற்கு பிறகு நடந்தவையெல்லாம் அண்மைக்கால வரலாறு.
தனது கட்சியை அதன் வரலாறு காணாத தோல்விக்கு இட்டுச்சென்ற ஒரு தலைவர் தன்னந்தனி பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு தனது அரசியல் போக்கிற்கு முற்றிலும் எதிரான ராஜபக்சாக்களின் கட்சியின் ஆதரவுடன் பிரதமராக வந்து பிறகு பதில் ஜனாதிபதியாகி இப்போது பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவும் வந்துவிட்டார்.
மிகவும் இளம் வயதில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்துவந்த விக்கிரமசிங்க அனேகமாக தனது அரசியல்வாழ்வின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்ட போதிலும் மக்களினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படக்கூடிய செல்வாக்குமிக்க அரசியல் தலைவராக விளங்கமுடியாமல் போய்விட்டது.
எந்த ராஜபக்சாக்கள் முன்னெடுத்த அரசியல் விக்கிரமசிங்கவை படுமோசமான தோல்விக்கு இட்டுச்சென்றதோ அதே ராஜபக்சாக்களின் ஆதரவுடன் அவர் இன்று ஜனாதிபதியாகியிருக்கிறார்.
நாட்டு மக்களினால் பெரிதும் வெறுக்கப்படுகின்ற ராஜபக்சாக்களின் நலன்களை பாதுகாக்கின்ற கையாள் என்று கூட அவர் விமர்சிக்கப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது.
ஜனாதிபதி கோதாபயவை மாத்திரமல்ல பிரதமர் விக்கிரமசிங்கவையும் கூட பதவிவிலக வேண்டும் என்றே மக்கள் கிளர்ச்சி போராட்டக்காரர்கள் வலியுறுத்திவந்தார்கள். அவர் ஜனாதிபதியாக தெரிவானால் ‘ அறகலய ‘ மக்கள் கிளர்ச்சியின் இரண்டாவது கட்டம் வெடிக்கும் என்று அரசியல் அவதானிகள் பலரும் கடந்த சில நாட்களாக கூறிவருகிறார்கள்.
புதிய ஜனாதிபதி போராட்டக்காரர்களை எவ்வாறு அணுகுவார் என்பது அடுத்துவரும் நாட்களில் தெளிவாக தெரியவரும்.
தற்போதைய பாராளுமன்றம் மக்களின் ஆணையை இழந்துவிட்டது ; மக்களின் புதிய ஆணையைப் பெறுவதற்கு தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை தீவிரமாகக் கிளம்பியிருக்கும் ஒரு தருணத்தில் அதே பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய தார்மீக நியாயப்பாடு குறித்த கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
எது எவ்வாறிருந்தாலும், தன்னிடமிருந்து இதுகாலவரையும் நழுவிக்கொண்டிருந்த நாட்டின் அதியுயர் பதவிக்கு தன்னை உந்தித்தள்ளிய சூழ்நிலையை மனதிற் கொண்டவராகவே ஜனாதிபதி விக்கிரமசிங்க செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.தவறான கொள்கைகளினாலும் செயற்பாடுகளினாலும் தங்களுக்கு சொல்லொணா அவலத்தைத் தந்த ஒரு ஜனாதிபதியை மக்கள் நாட்டை விட்டு தப்பியோடவைத்த ஒரு வரலாற்று முக்கியத்துவ கிளர்ச்சியின் பின்னரே தான் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார் என்பது விக்கிரமசிங்கவை எப்போதுமே எச்சரிக்கை உணர்வுடன் வைத்திருக்கக்கூடிய அபாயச் சமிக்கையாகும்.
கடந்த நான்கு மாதகால மக்கள் சீற்றம் தனிப்பட்டவர்களுக்கு எதிரானதல்ல,தவறான ஆட்சிமுறைக்கு எதிரானது.