ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் பிரதமர் யார்! வெளியான தகவல்
20 Jul,2022
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தில் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவார் என பொதுஜன பெரமுனவை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவிக்கான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இதில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும், டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும், அனுரகுமார 03 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அதன் பிரகாரம் பாரிய பெரும்பான்மை பெற்று சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலை தொடர்ந்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதில் அதிபராக நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்பொழுது பிரதமர் பதவி வெற்றிடமாக உள்ளது. வெற்றிடமாக உள்ள பிரதமர் பதவிக்கு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.