கோத்தபய ராஜபக்சேவுக்கு விசா கொடுக்க அமெரிக்கா அதிரடி மறுப்பு
14 Jul,2022
மக்கள் போராட்டத்தால் ஆட்சியை இழந்த கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டுவெளியேறியதும் ராணுவத்தின் பாதுகாப்பில் கொழும்பு புறநகரில் தங்கி இருந்தார். அங்கிருந்து முதலில் அவர் துபாய் செல்ல முடிவு செய்தார். ஆனால் விமான நிலையத்திலும், கடற்படை தளத்திலும் மக்கள் குவிந்ததால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவரால் தப்பி செல்ல இயலவில்லை. இதற்கிடையே சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகளிடம் அவர் உதவி கேட்டார். ஆனால் அந்த நாடுகளில் இருந்து சாதகமான பதில் வரவில்லை. கோத்தபய ராஜபக்சே ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தார். 2019-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் அமெரிக்க குடியுரிமையை திரும்ப பெற்றார். என்றாலும் அமெரிக்க அரசை தொடர்பு கொண்டு தனக்கு உதவி செய்யுமாறு கெஞ்சி கேட்டார்.
ஆனால் கோத்தபய ராஜபக்சேவின் விசாவை பரிசீலிக்க கூட அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். கொழும்பில் இருந்து வெளியேற எந்த ஒரு உதவியும் செய்ய இயலாது என்று அமெரிக்காவும் கைவிரித்தது. இதனால் எப்படி நாட்டை விட்டு வெளியேறுவது என்று கோத்தபய குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டார். சொந்த கட்சியிலும், ராணுவத்திலும் ஒரு பிரிவினர் தனக்கு எதிராக செயல்படுவதை கண்கூடாக பார்த்த கோத்தபய ராஜபக்சே உயிருடன் தப்ப முடியுமா என்று தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். கொழும்பு புறநகரில் அவர் ஒரே இடத்தில் தங்காமல் ரகசிய இடங்களுக்கு மாறிக் கொண்டே இருந்தார்.
ராணுவத்தின் கமாண்டோ வீரர்கள் அவரை சுற்றி நின்று பாதுகாப்பு அளித்தனர். மக்கள் போராட்டத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் கொழும்பில் அவர் படாதபாடுபட்டார். எனவேதான் வெளி நாட்டுக்கு தப்பி செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அமெரிக்கா உதவ மறுத்த நிலையில் அடுத்து இந்தியாவின் உதவியை ராஜபக்சே நாடினார். விமானம் மூலம் தப்புவது கடினம் என்பதை உணர்ந்த அவர் கடல் வழியாக தப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். கப்பல் மூலம் இந்தியா வந்து பிறகு துபாய் செல்ல அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு இந்திய வெளியுறவுத்துறை சாதகமான பதில் சொல்லவில்லை. இதையடுத்து சரக்கு விமானத்தில் இந்தியா வருவதாகவும், இந்தியாவில் இருந்து தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோத்தபய ராஜபக்சே இந்திய அரசுக்கு தூதுவிட்டார்.
அவரது இந்த கோரிக்கையையும் இந்தியா ஏற்கவில்லை. இதனால் உள்ளூர் அரசியல்வாதிகளிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு விமானத்தை வாங்கி கொண்டு மாலத்தீவு சென்று சேர்ந்திருக்கிறார். இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சேவை அந்த நாட்டு ராணுவத்தினர் ரகசிய தீவு ஒன்றுக்கு அழைத்து சென்று உள்ளனர். அந்த தீவில் உள்ள பங்களாவில் கோத்தபய ராஜபக்சேவும், அவரது மனைவியும் தங்கி உள்ளனர். மாலத்தீவு மக்களுக்கு இன்று காலை இந்த தகவல் தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாலத்தீவில் கணிசமான அளவுக்கு இலங்கை தமிழர்கள் உள்ளனர். அவர்களும் கோத்தபய ராஜபக்சேவின் வருகைக்கு அதிருப்தி வெளியிட்டனர். இதற்கிடையே மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தையூப் சாஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் புகலிடம் கொடுக்க கூடாது. அவரை உடனே வெளியேற்ற வேண்டும்" என்று கூறி உள்ளார். மாலத்தீவில் உள்ள சில கட்சி தலைவர்கள் கூறுகையில், "கோத்தபய ராஜபக்சேவுக்கு அகதி அந்தஸ்து வழங்ககூடாது" என்று வலியுறுத்தி உள்ளனர். மாலத்தீவிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் வேறு நாட்டுக்கு தஞ்சம் கேட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டுள்ளார்.