செல்லும் இடம் எல்லாம் வெறுப்பு": மாலத்தீவிலும் கோத்தபயவுக்கு மக்கள் எதிர்ப்பு
13 Jul,2022
ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மாலத்தீவில் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கொழும்பு இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவு தப்பிச்சென்றுள்ளார். அதிபர் ராஜபக்சே, அவரது மனைவி மற்றும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் நேற்று இரவு கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலத்தீவு செல்லும் ராணுவ விமானத்தில் ஏறினர். அவரது இளைய சகோதரரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு ராஜபக்ச தங்களிடம் ஒரு விமானம் கோரியதாகவும், அவருக்கு விமானத்தை வழங்குவதற்கு தாங்கள் கடமைப்பட்டிருப்பதாகவும் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாலத்தீவுக்கு வந்தடைந்தவுடன், அதிபர் ராஜபக்சே அவரது மனைவி மற்றும் பாதுகாவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ரகசிய தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று மாலத்தீவு விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இலங்கை மக்கள் போராட்டத்துக்கு மாலத்தீவு மக்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் கோத்தபய ராஜபக்சேவை மாலத்தீவை விட்டு வெளியேற்றுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து உள்ளனர். அதிபர் ராஜபக்சேவும் அவரது சகோதரர் பசிலும் தப்பிச் செல்ல இந்தியா உதவியதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இன்று நிராகரித்துள்ளது. இது குறித்து வெளீயிடப்பட்டு உள்ள டுவிட்டில் "கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றது. ஊகத்தின் அடைப்படையில் வெளியானது என திட்டவட்டமாக மறுக்கிறது. இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.