கோட்டாபய இணங்கினால் அனுர குமாரவிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க தயார்
05 Jul,2022
: நாடாளுமன்றத்தில் ரணில்
அனுர குமார திசாநாயக்கவின் வேலை திட்டம் வெற்றி அளிக்கும் என்றால் அதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இணங்கினால் பிரதமர் பதவியை அனுர குமாரவிடம் ஒப்படைக்க தயார் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் "பிரதமர் பதவியை வழங்கினால் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டுவருவேன் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அவரிடம் ஏதேனும் திட்டம் இருப்பின் அதை தான் வரவேற்கிறேன், அந்தத் திட்டத்தை அரச தலைவரிடம் சமர்ப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த அமர்வில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளார்.
நேற்றைய அமர்வின் போது, அரச தலைவரை காணவில்லை, கண்ணுக்கு புலப்படாத கோட்டபாய என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்க்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே இன்றைய அமர்வில் கலந்து கொள்வதற்கும் விவாதத்தைக் கேட்பதற்கும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.