பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு பிரேரணைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளன.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த யோசனைகளை இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4,917 உள்ளூராட்சி சபைகளுக்கு தலா 4 மில்லியன் ரூபாய் என மொத்தம் 19.67 பில்லியன் என்பது இடைநிறுத்தப்படும் முதவாவதுபிரேரணையாகும்.
அத்துடன் கிராமப்புற சமூக மேம்பாட்டுக்கான 85 பில்லியன் நிதி ஒதுக்கீடும் நிறுத்தப்படும்.
தற்போது பெரும் சுமையாகக் காணப்படும் உள்ளுராட்சி நிறுவனங்கள் உட்பட நாட்டின் பொதுத்துறை முழுவதும் சாத்தியமான செலவினக் குறைப்புகளை மீளாய்வு செய்வதற்கு ஏற்ப நிதி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை மறுதினம் (06) நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வரைவு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடப்பட்டதன் பின்னர், அதனை மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பங்களிப்புடன் இந்த வரைவு தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், அங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் அடங்கிய புதிய வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதோடு, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஒன்பது பங்காளிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளன.
இதேவேளை குறித்த 21 ஆவது திருத்த சட்டத்தினால் அரச தலைவருக்கான நிறைவேற்று அதிகாரம் பெருமளவில் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் எனவும் இந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இரட்டை பிரஜாவுரிமையை கொண்ட பசில் தனது நாடாளுமன்ற பதவியை இழக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.