அதிபரின் அதிகாரத்தை மாற்றும் மசோதாஇலங்கை எம்.பி.,க்கள் திடீர் எதிர்ப்பு
03 Jun,2022
இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான, அரசியல் சாசனத்தின் 21வது சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளும் கூட்டணி எம்.பி.,க்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் கூட வாங்க முடியாத அளவுக்கு அந்த நாடு திணறுகிறது.இதற்கு பொறுப்பேற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேற வலியுறுத்தி பொதுமக்கள் நடத்தும் போராட்டம், 50 நாட்களைத் தாண்டியுள்ளது.
இதற்கிடையே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார்.முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயை பிரதமராக கோத்தபய ராஜபக்சே நியமித்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகளும் அடங்கிய கூட்டணி அரசு அமைந்துள்ளது.இந்நிலையில், அதிபருக்கான அதிகாரத்தை குறைத்து, பார்லிமென்ட்டுக்கே முழு அதிகாரத்தை அளிக்கும் வகையில், அரசியல் சாசனத்தில் 21வது சட்டத் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக, சமீபத்தில் நடந்த ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சிக் கூட்டத்தில் அதிபர் கோத்தபய அறிவித்திருந்தார்.இது தொடர்பாக விவாதிக்க எம்.பி.,க்கள் கூட்டத்துக்கு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்தார்.
இதில் பங்கேற்ற கோத்தபய ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி எம்.பி.,க்கள் பலர் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக கோத்தபய, மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.