எரிபொருள் இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி
29 May,2022
இலங்கையில் தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதி செய்து கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பெட்ரோல், டீசல் இறக்குமதிக்கு தேவையான அமெரிக்க டாலர் கையிருப்பு இன்றி அந்நாட்டு அரசு தவிக்கிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகள், கப்பல்களில் எரிபொருள் அனுப்பி வைத்தும் அந்நாடு கடும் தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கிறது.பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா நேற்று கூறியதாவது:நாட்டில் உள்ள அனைத்து தனியார் எரிபொருள் நிலையத்தினரும் பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்து, தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக இலங்கை பெட்ரோலிய கழகத்துக்கும், மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் குறைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.