மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு தஞ்சம் அளிக்கிறதா?
25 May,2022
மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு தஞ்சம் அளிக்கிறதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. கொழும்பு, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி விலகினார். அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். அதனால் சில நாட்கள், கடற்படை முகாமில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்த அவர், வெளியே தலைகாட்டாமல் இருந்தார். சமீபத்தில் நாடாளுமன்றத்துக்கு வந்தார். இதற்கிடையே, மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நஷீத், மாலத்தீவில் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாலத்தீவு பத்திரிகையில் வெளியான தகவலை மேற்கோள் காட்டி, இலங்கை பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- ராஜினாமா ெசய்தவுடன், மகிந்த ராஜபக்சே, முகமது நஷீத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இலங்கையில் சுமுகநிலை திரும்பும்வரை மாலத்தீவில், தானும், தன் குடும்பமும் தஞ்சம் அடைய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் தங்கி இருக்க ராஜபக்சே விருப்பம் தெரிவித்தார். அதை நிராகரித்த முகமது நஷீத், மாலத்தீவில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் தங்கிக்கொள்ளுமாறு கூறினார். பின்னர், முகமது நஷீத், இலங்கைக்கு சென்றார். கடந்த சில நாட்களாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். ராஜபக்சே, குடும்பத்துடன் இலங்கையில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி மாலத்தீவுக்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி வருகிறார். இத்தகவல்களை மாலத்தீவு அரசு உயர் அதிகாரி ஒருவர் சொன்னதாக இலங்கை பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.