இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண சிறப்பு குழுக்கள் அமைத்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
14 May,2022
குழப்பமான சூழலுக்கு மத்தியில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். இன்று தனது அலுவல் பணிகளை தொடங்கிய அவர், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை நீக்கி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு விசேஷ குழுவொன்றை நியமித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் கலந்து ஆலோசித்து மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான யோசனைகளை கோருவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ருவான் விஜேவர்தன மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பணியையும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் உர நெருக்கடி குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்கும் பணியையும் மேற்கொள்கிறார்.
பெட்ரோலியம் தொடர்பான பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறைகள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகளைக் கண்டறிந்து, துறை சார்ந்த நபர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று, நாட்டு மக்களின் உண்மை நிலை குறித்து இந்தக் குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேரடியாக அறிக்கை அளிக்க உள்ளது. முன்னதாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் ரணிலை, இந்திய தூதர் கோபால் பகாலேவை சந்தித்தார். இந்தியாவுடன் இலங்கை என்றும் நல்லுறவை பேண விரும்புவதாக பிரதமர் ரணில் கூறியுள்ளார்.
மக்களின் பெரும் போராட்டத்திற்குப் பின் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில் அங்கு புதிய அரசு அமைந்துள்ளது. இருப்பினும், அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகளும் போராட்டக்காரர்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். சுற்றுலாவை பிரதான வருவாயாக கொண்ட இலங்கையில், கோவிட் லாக்டவுன் காரணமாக மாபெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி இரு மாதங்களாக போராடி வருகின்றனர். அத்தியவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொருள்களின் விலைகளும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.