கம்ப இராமாயணத்தில், இறுதிப் போரின் போது நிராயுதபாணியாக நின்ற இராவணனை “இன்றுபோய் நாளை வா“ என்று இராமன் கூறியபோது, இராவணன் கலங்கியதை“கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்“ என்று கம்பரால் உவமிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிகள் அருணாச்சலக் கவிராயருக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. முதலில் இவ்வரியை யார் எழுதியது என்ற ஆராய்வை விட இந்த கடன் பட்ட நிலைமையே இலங்கைக்கும் இன்று ஏற்பட்டுள்ளது. அதிக கடன்களால் கலங்கி நிற்கிறது இலங்கை என்பதே நிதர்சனமாகும்.
கடன் என்பது வாங்குவதற்கு இலகுவானதாக இருக்கின்ற போதிலும் வருமானம் குறைந்தோருக்கு அதை திருப்பிச் செலுத்தும் விதமே மிகவும் கடினமாக உள்ளது.
வட்டி, அசல் என்பவற்றை திருப்பிக் கொடுக்கையில் மீண்டும் வட்டிக்கு வாங்கும் நிலையும் ஏற்படும்.
கடன் வாங்கியோரைப் பற்றிக் குறிப்பிடுகையில் கடன் கொடுப்பவர்களையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
அதிலும் சிலர் கந்துவட்டிக்கார்களாக இருக்கின்றனர் என்பது கண்கூடாகக் காணும் உண்மை. சொத்துக்களை அடமானத்துக்கு எடுத்து வட்டிக்கு பணம் கொடுக்கும் அவர்கள், கடன்களைக் கட்ட முடியாத கையறு நிலையில் கடன்காரர்களின் நிலை மோசமாகையில் சொத்துக்களை அபகரித்துக் கொள்கின்றனர்.
உலக பொலிஸ்காரன் என்ற புனைப்பெயரால் ஐக்கிய அமெரிக்கா அழைக்கப்படுவதைப் போல தற்போது உலக கந்துவட்டிக்காரன் என்ற புனைப்பெயரை பலர் சீனாவுக்குச் சூட்டியுள்ளனர்.
அந்த பெயருக்கு பொருந்தும் வகையிலேயே சீனாவின் நடவடிக்கைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
வளர்ந்துவரும் நாடுகளுக்கு மில்லியன் கணக்கான டொலர்களை கடனாக வாரி வழங்கும் சீனாவின் நோக்கம் வட்டி மட்டும் அல்லாது அந்த நாடுகளில் வேரூன்றி தமது பெல்ட் அன்ட் றோட் முன்முயற்சியை சாதிக்கும் வியூகமாகவே அமைந்துள்ளது.
2013ஆம் ஆண்டு பெல்ட் அன்ட் றோட் முன்முயற்சியை ஆரம்பித்த போது, இருபத்தோராம் நூற்றாண்டின் பட்டுப்பாதை என்று சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் அதைக் குறிப்பிட்டிருந்தார்.
சீனா இந்த திட்டத்தின் மூலம் உலக நாடுகளை தமது நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மூன்றையும் இணைக்கும் நிலம் மற்றும் கடல் வழிப் பாதைகளை இந்தத் திட்டம் உருவாக்கும்.
அது, அதிவேக வீதிகள், ரயில் மார்க்கங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பன மூலம், உலக நாடுகளை சீனாவுடன் தொடர்பு படுத்தும். சீனாவை தூர நாடுகளுடன் இணைக்கவே பல நாடுகளில் துறைமுகங்களை நிர்மாணிக்கிறது சீனா.
2018 ஆம் ஆண்டின் தரவுகளுக்கு அமைய வளர்ந்துவரும் நாடுகள் உட்பட உலக நாடுகளுக்கு
5 ட்ரில்லியன் டொலருக்கும் அதிகமான கடனை சீனா வழங்கியுள்ளது என்றும் இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம், கொழும்பு தாமரைக் கோபுரம், அதிவேக நெடுஞ்சாலைகள் என்பன சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன் மூலம் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களாகும் என்பதுடன் மேலும் சில முதலீடுகளையும் சீனா இங்கு செய்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக சீனாவிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்கியமையும் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
சீனாவிடம் பாரியளவில் கடன் பெற்றுள்ள இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார சீரமைப்புத் திட்டத்துக்கு இணங்க 51 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனை தற்காலிகமாக திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு கடந்த 12ஆம் திகதி அறிவித்தது.
எப்போதும் பெற்றுக்கொண்ட கடனை செலுத்தத் தவறாத இலங்கை, பாரிய நெருக்கடிக்கு மத்தியில் நாணய நிதியத்தின் திட்டத்துக்கு இணங்கவே குறித்த தீர்மானத்தை எடுத்திருந்தது.
இந்த நிலையில், தமது கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான இலங்கையின் முடிவானது, இலங்கைக்கான 2.5 பில்லியன் டொலர் சீன உதவி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தியுள்ளதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (26) நடத்திய ஊடகவியாளர்கள் சந்திப்பின் போது, கடனை மறுசீரமைக்கவும் நாணய நிதிய உதவியை பெற்றுக்கொள்ளவும் இலங்கை மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கவலையடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்க சீனா தன்னால் இயன்றதைச் செய்துள்ளது,
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் சர்வதேச நாணய நிதியத்துக்குச் சென்று திருப்பிச் செலுத்த முடிவு செய்துள்ளனர்“ என்று அவர் குறிப்பிட்ட கருத்தின் மூலம் இலங்கை முன்வைத்துள்ள கடன் மறுசீரமைப்புக்கு சீனா இணங்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
மேலும், கடன் மறுசீரமைப்பு எதிர்கால இருதரப்பு கடன்களில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடலை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம், இலங்கை சர்வதேச நாணய நிதித்துக்கு சென்றமை குறித்து சீனா உண்மையிலேயே கவலை கொள்கிறதா அல்லது எதிர்கால கடன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என, இலங்கையுடனான கோபத்தில் எச்சரிக்கை விடுக்கிறதா என்ற கேள்வியெழுகிறது.
ஏனெனில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் வட்டி ஆகியவற்றை மீள வழங்குவதற்கு தம்மிடமே இலங்கை மீண்டும் கடன் வாங்கும் என்ற சீனாவின் எதிர்பார்ப்பு கலைந்ததே அதன் கவலைக்குக் காரணமாக இருக்கலாம்.
புதிய நிபந்தனைகள் மற்றும் புதிய வட்டி வீதங்களின் அடிப்படையில் புதிய கடனைக் கொடுத்து பழைய கடனை அடைக்க பொறி வைப்பதே சீனாவின் திட்டமாக இருந்தது.
Hambantota Port
பெல்ட் அன்ட் றோட் முன்முயற்சியின் முக்கியமான பகுதியாக பல நாடுகளை கடல் வழியில் இணைக்கும் மையப் புள்ளியான ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சைனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு, 1.12 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை பெற்றுக் கொண்டு இலங்கை அரசால் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
2017 ஆம் ஆண்டில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விட்டதன் மூலம் டொலர்களைப் பெற்ற இலங்கை, சீன வங்கிகளுக்கு அவற்றை செலுத்த வில்லை எனவும் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை திருப்பிச் செலுத்துவதற்காக பணத்தைப் பயன்படுத்தியது என்றும் சீனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
அவரது கூற்றின் படி மேலும் இலங்கை தம்மிடம் கடன் வாங்கி கடன்பொறிக்குள் சிக்க வேண்டும் என்பதையா சீனா எதிர்பார்க்கிறது என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது.
ஏனெனில், சீனாவின் கடன் பொறி இராஜதந்திரத்துக்குள் சிக்கி 40க்கும் மேற்பட்ட நாடுகள் தவித்து வருகின்றன. அதில் பெரும்பாலன ஆபிரிக்க நாடுகளும் அடக்கம்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் சர்வதேச ஊடகங்களில் வெளியான முக்கிய செய்தியின் படி, 207 மில்லியன் அமெரிக்க டொலர்களை 20 ஆண்டுகள் கடன் காலம், 7 ஆண்டுகள் கருணைக் காலத்துடன், 2 சதவீத வட்டிக்கு பெற்ற உகாண்டா, கடன் ஒப்பந்தத்தின் ஆபத்தான ஷரத்தின் காரணமாக தமது ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தை இழந்து நிற்கிறது.
உகாண்டா வாங்கியது 207 மில்லியன் டொலர். ஆனால் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மூலம் 1.12 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெற்றுக்கொண்டது. செலுத்தத் தவறினால் என்ன நடக்கும் என்பதற்கு உகாண்டா விமான நிலையம் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வட்டியையும் அசலையும் திருப்பிச் செலுத்தாவிடின் கந்துவட்டிக்காரன் சொத்தை அபகரித்துக்கொள்வது சாதாரணம்.
இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்போது அரசியல் நெருக்கடிகளை உருவாக்கியுள்ள நிலையில் சீனாவின் பெல்ட் அன்ட் றோட் திட்டமும், அதன் மூலம் அதிக வட்டிக்குக் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணம் என நிபுணர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி இலங்கையிலுள்ள வணிக வளாகங்கள் உட்பட பலவற்றில் சீன முதலீடு அதிகரித்து வருவதுடன், அதற்கு பிரதி பலனாக இலங்கை கடன்களைப் பெற்றுக் கொண்டது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு பெல்ட் அன்ட் ரோட் முன்முயற்சியின் கீழ் 385 பில்லியன் டொலர் மறைமுக கடன்களும் சீன நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வுகள் வெளிக்காட்டுவதாக சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, சீனா மேற்கொள்வது கடன் பொறி இராஜதந்திரம் என்று தெளிவாகின்ற போதும், கடன் பொறி என்பது வெறும் கட்டுக்கதை என்றும், சில வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் வேண்டுமென்றே உருவாக்கி விளம்பரப்படுத்துவதாகவும் சீனத் தூதுவர் மேற்குறிப்பிட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் வலியுறுத்தியிருந்தார்.
அப்படியானின், பெரும் தொகை டொலர்களை கடனாக வழங்கும் சீனா, ஏன் மறைமுகக் கடன்களையும் வழங்குகிறது.
சீனாவின் கடன் பொறி இராஜதந்திரத்தையும் பலர் குறிப்பிடுவதைப் போல கந்துவட்டிக்காரன் என்ற புனைப்பெயரையும் நிரூபிக்கும் வகையிலேயே சீனாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இலங்கை விடயத்தில் சீனாவின் நிலைப்பாடு என, தூதுவரால் தெரிவிக்கப்பட்ட விடயத்தின் மூலம் உண்மையிலேயே கவலை கொள்கிறதா அல்லது கோபம் கொள்கிறதா என்பது எதிர்கால நடவடிக்கைகளில் நிச்சயம் வெளிப்படும்.