சஹ்ரானின் வாகனத்தை முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர பயன்படுத்தினாரா? – சபையில் கேள்வி
19 Apr,2022
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹாசிம் பயன்படுத்திய வாகனத்தை முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பயன்டுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ள டுவிட்டர் பதிவால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிடுகையில்,
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் பயன்படுத்திய வாகனத்தை முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பயன்படுத்தி வருவதாக இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான ரங்க சிறிலால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், கார் ரக வாகனத்தின் படத்தை பொறித்து, லேன்ட் குறூஸ்சர் ரக இந்த கார் வழக்கு சான்றுப் பொருளாக நீதிமன்றத்தின் பொறுப்பின் கீழ் இருக்க வேண்டும் என்ற போதிலும் அதனை எப்படி அரசியல்வாதி ஒருவர் பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சரத் வீரசேகர இதற்கு பதிலளிக்கவேண்டும் என்றார்.
இதன்போது எழுந்த முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர .
இந்த செய்தி தொடர்பில் நானும் இன்று (நேற்று) காலையில் அறிந்தேன். அது தொடர்பில் எனது செயலரிடமும் வினவினேன்.
அந்த வாகனம் அரசுடைமையாக்கப்பட்ட வாகனம். சஹ்ரான் ஹாசீம் பயன்படுத்திய அந்த வாகனத்தை நான் பயன்படுத்தவில்லை.
ஆனால் எனது அமைச்சின் கீழிருந்த விசேட செயலணியின் பாவனைக்கு அந்த வாகனம் வழங்கப்பட்டிருந்தது என்றார். இதன்போது எதிர்க்கட்சியினர் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர்.
இதன்போது எழுந்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர். மனுஷ நாணயக்கார ,சஹ்ரான் ஹாசீம் பயன்படுத்திய அந்த வாகனம் ஒரு நீதிமன்ற சான்றுப்பொருள், அதனை எப்படி அமைச்சரோ அவரின் விசேட செயலணியோ பயன்படுத்த முடியும் எனக்கேள்வி எழுப்பினார்.
அதனைத்தொடர்ந்து எழுந்த மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க, சஹ்ரான் ஹாசிமுக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெறுகின்றது.
அவர் பயன்படுத்திய வாகனம் நீதிமன்ற சான்றுப்பொருளாக இருக்கும்போது எப்படி அதனை பயன்டுத்த முடியும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.
இதற்கு சரத் வீரசேகர எம்.பி.யோ அரசோ பதில் வழங்கவில்லை.