நாட்டின் நடப்புகள் மக்களுக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளன. அன்றாட உணவுக்கும் அத்தியாவசிய தேவைகளையும் அனைத்து விடயங்களையும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கின்றனர். இதனைத் தவிர்க்க முடியாது இருப்பதும் உண்மையாகவே உள்ளது.
ஹர்ஷ டி சில்வா
இவ்வாறானதோர் பின்னணியில் பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பாரிய குண்டொன்றை போட்டுள்ளார்.
இதனால் மக்கள் கலங்கிப் போய் உள்ளனர். அரச வங்கி ஒன்று திவாலாகியுள்ளதாக (வங்குரோத்து நிலை ) எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பாரிய அபாயகரமான நிலையாகும். அப்படி இருந்தால் அது அழிவின் ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நிதியமைச்சர் கடந்த 3 மாதகாலமாக பாராளுமன்றத்திற்கு வருகை தரவில்லை. மத்திய வங்கியின் ஆளுநர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதில்லை. நிதி நிலைமைகள் தொடர்பான கேள்விக்கு விடை கிடைப்பதில்லை. இவ்வாறான பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்றும் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் மத்திய வங்கி அதிரடியான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அரச வங்கிகள் மிகவும் சுமுகமான முறையில் இயங்குவதாகவும் நாட்டின் வங்கி கட்டமைப்பு ஸ்திரமான நிலையில் இருப்பதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், அரச வங்கிகளில் செயற்பாடுகள் மிகவும் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை பொது மக்களுக்கும் ஏனைய தரப்பினருக்கும் உறுதிப்படுத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும் எண்ணிக்கையான ஊழியர்கள், வர்த்தகர்கள், சாதாரண பொதுமக்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிவோர் என பலரும் அரசு வங்கிகளையே நம்பி உள்ளனர்.
இவ்வாறான சூழலில் நாட்டின் நிதித்துறை தொடர்பில் அதுவும் விசேடமாக வங்கிகள் குறித்து வெளியாகும் செய்திகள் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் உள்ளனர்.
ஏலவே நாட்டில் ஒரு சில தனியார் நிதி நிறுவனங்கள் திவாலாகி மக்கள் பட்ட துயரங்கள் இன்றும் கூட அவர்களின் மனதில் அழியா வடுக்களாகவே உள்ளன.
அனைத்துக்கும் மத்தியில் நிதி நிறுவனங்கள் தொடர்பில் சந்தேகம் எழுந்தாலோ அந்த அச்சம் குடி கொண்டாலோ அது வங்கித் துறையை பாதிப்பது மாத்திரமன்றி அது அவர்களுக்கு பேரிடியாக அமைந்து விடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
எவ்வாறெனிலும் மத்திய வங்கி அரசு வங்கி கட்டமைப்பு ஸ்திரமானதாக இருப்பதாக அறிவித்துள்ளமை சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இன்றை சூழலில் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டுக்கு பணத்தை அனுப்புவோரும் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாவார்கள். எனவே உணர்வுபூர்வமான இவ்விடயத்தில் காத்திரமான வழியில் கையாள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்பதை மறந்து போகக் கூடாது.