இந்திய கடனின் கீழ் 35,000 மெட்ரிக் டொன் 92 ஒக்டேன் பெட்ரோலுடன் கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி தீர்க்கப்படாததால் நாட்டில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் தொடர்ந்து வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதேவேளை, வரிசையில் காத்திருக்கும் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் மோதல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தத்க்கது.
இதனால், ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்களை கண்காணிக்க இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தக்க தருணத்தில் இந்தியா கை கொடுத்துள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 1,500 கொள்கலன்கள் பணம் செலுத்தி விடுவிக்க முடியாமல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பொருட்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்திற்காக கப்பல்களுக்கு மேலதிக கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதால் பொருட்களின் விலை கிலோவுக்கு 10 முதல் 35 ரூபாய் வரை அதிகரிக்கும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய கடன் உதவியின் கீழ் குறித்த கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் நேற்று (22) நிதி அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
துறைமுகத்தில் சிக்கியுள்ள கொள்கலன்களில் கோதுமை மா, அரிசி, சீனி, கடலை மற்றும் மிளகாய் உள்ளிட்டவை அதிகளவில் காணப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த கொள்கலன்களுக்கான பணத்தை இந்திய ரூபாயில் செலுத்த வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதிக்கு முன்னர் கொள்கலன்களை விடுவித்துக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்திய கடனின் கீழ் அரச வைத்தியசாலைக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய நிதியுதவியுடன் தனியார் துறை வழியாக மருந்துகளை இறக்குமதி செய்வதை எளிதாக்குவதற்கு மருத்துவ உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, மருந்து இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் 85% மருந்துகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செயலாளர் தெரிவித்தார்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்திவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 கொள்கலன் பெட்டிகளை விடுவிக்க இந்தியாவின் கடனுவியை பயன்படுத்த சில இந்திய விநியோகஸ்தர்கள் விரும்பவில்லை என தெரியவருகிறது.
தமது பொருட்களுக்கான பணத்தை இந்திய ரூபாவில் செலுத்தாது, அமெரிக்க டொலர்களிலேயே செலுத்த வேண்டும் என இந்திய விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து அத்தியவசிய பொருட்கள், மருந்து ஆகியவற்றை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் அண்மையில் இந்தியாவிடம் கடன் வசதியை பெறும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.
இதனையடுத்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க இந்தியா வழங்கியுள்ள இந்த கடனுதவியை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும் இந்தியாவின் இந்த கடன் வசதியை நடைமுறைப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை முழுமைப்படுத்த வேண்டியுள்ளதாக அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
சில இந்திய விநியோகஸ்தர்கள், தமக்கு செலுத்த வேண்டிய பணத்தை அமெரிக்க டொலர்களில் செலுத்துமாறு கோரியிருப்பதால், எதிர்வரும் காலத்தில் இறக்குமதி தொடர்பான சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும் எனவும் அச்சங்கம் கூறியுள்ளது.