சரத் பொன்சேகா உண்மைகளை கூறினால் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க முடியும்!
01 Mar,2022
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகளில் பிரதான சாட்சிக்காரராக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா முன்வந்து உண்மைகளை கூறினால் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க முடியும் என சிவில் செயற்பாட்டாளரும், அனைத்து வகையான பாகுபாடு மற்றும் இனவெறிக்கு எதிரான சர்வதேச அமைப்பின் இலங்கைக்கான தலைவருமான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்தார்.
சரத் பொன்சேகா யுத்தத்தை இயக்கிய அப்போதைய தளபதி என்பது மட்டுமல்ல அவர் நடுநிலையாக சில விடயங்களை கூறிக்கொண்டுள்ளார். இராணுவ தளபதி என்ற ரீதியில் தனது இராணுவத்தை காப்பாற்ற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார், அதனை பிழையென கூறிவிட முடியாது.
அதேபோல் தனிப்பட்ட தவறுகள் இடம்பெற்றிருக்க வேண்டும், அதற்கான விசாரணைகளை நடத்தி உரிய நபர்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தனிப்பட்ட குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறுவதே மிகமுக்கிய வாக்குமூலமாக கருத வேண்டும். ஆகவே சரத் பொன்சேகா உண்மைகளை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவற்றை கூறினார்.