மோடி இலங்கைப் பயணம் - மோடிக்குரிய நிகழ்ச்சிநிரல் என தகவல்
16 Feb,2022
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்தமாதம் 18ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இலங்கையில் சந்திப்புகள் மற்றும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு வருவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் குறித்த ஒழுங்குகளை மேற்கொள்ளும் வகையில் இருக்கலாம் என்ற ஊகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இடம்பெறும் பிம்ஸ்ரெக் மாநாட்டுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருவது குறித்து டெல்லியில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்தப் பயணம் இடம்பெறுவதற்குரிய அறிகுறிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கைப் பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிம்ஸ்ரெக் அமைப்பின் உச்சி மாநாடு மார்ச் 31 ஆம் திகதியன்று கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னரே மார்ச் 18 முதல் 20 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஜெய்சங்கர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி நிரல்கள் குறித்த ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காலப்பகுதியில் வடபகுதிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியில் அமைக்கபட்டுள்ள கலாசார நிலையத்தை நரேந்திர மோடி திறந்துவைப்பதற்குரிய ஒழுங்குகளை ஜெய்சங்கர் செய்யலாமென எதிர்பார்க்கப்பட்டாலும் இதுவரை இந்த நகர்வுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.