கனடா செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
12 Feb,2022
இலங்கையர்களுக்கு கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாக பாரிய மோசடி இடம்பெறுவதாக, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் ஆட்சேர்ப்பு மோசடி தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“கனடா அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு பிரச்சாரம் 2022” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அது போலியானதெனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு மூலம் உடனடி பணி அனுமதிகளை வழங்கப்படுவதாக உறுதியளித்து மக்களை ஏமாற்றுவதாக தெரியவந்துள்ளதென கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சாரம் பொய்யானது என மீண்டும் வலியுறுத்திய இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகள் மற்றும் குடிவரவு மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் குடியேற்ற மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க உயர் ஸ்தானிகராலயம் இணைப்பொன்றையும் வெளியிட்டுள்ளது.
கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல இலட்சம் ரூபாய் மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.