இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் 3-வது நாளாக ஏலம்
10 Feb,2022
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களிடம் இருந்து 105 நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அந்த படகுகள் ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த படகுகள் ஏலம் விடும் பணி கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
முதல்கட்டமாக அன்று இலங்கையில் உள்ள காரை நகர் துறைமுகத்தில் 65 படகுகள் ஏலம் விடப்பட்டன. நேற்று காங்கேசன் துறைமுகத்தில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்பட்டன.
இன்று 3-வது நாளாக ஏலம் விடும் பணி நடந்தது. கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சியில் இன்று 24 விசைப்படகுகள் ஏலம் விடப்பட்டன. வருகிற 11-ந் தேதிவரை மொத்தம் 5 நாட்கள் இந்த ஏலம் நடக்கிறது.
படகுகள் ஏலம் விடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.