பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்து விடக்கூடாது!தீர்வு குறித்து இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை!
08 Feb,2022
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் எனப் பல வாக்குறுதிகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட போதும் சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எதனையும் நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இந்தியாவை தனது நட்பு நாடென காட்டிக்கொள்ளும் விதமாக, இந்தியாவிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இந்திய விஜயம் என தெரிவித்துள்ளார்.
ஆகவே இனப் படுகொலை குறித்த சர்வதேச விசாரணையை இந்தியா நேரடியாக வலியுறுத்தாமல் விட்டாலும் ஏனைய நாடுகளின் ஊடாக அதனை முன்னெடுப்பதற்குரிய இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் இந்தியாவினால் எவ்வளவு தூரத்திற்கு எமது அதிகாரங்களை பலப்படுத்த முடியுமோ அதுவே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் கைகொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு குறித்து இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை!
ஈழ தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து இந்தியா எந்த அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களது பிரச்சினைகள் என்பது, உள்ளார்ந்த குறைபாடுகளால் எழுந்தவை. அவை அவதானத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இந்த பிரச்சினைகளின் ஆரம்ப புள்ளிகள் தொடர்பாக இன்னும் அவதானம் செலுத்தப்படவில்லை. எனினும் இவை தீர்க்க முடியாத பிரச்சினைகள் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அகழ்வு பணிகள் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்றும், இந்தியாவில் இருந்து இலங்கை மின்சாரத்தைப் பெறக்கூடியதாக இருந்தால் பாரிய நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.