யுத்த விவகாரம்- உண்மைகளை பகிரங்கப்படுத்திய பசில்!
01 Feb,2022
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது கருப்புச் சந்தையிலிருந்து பணம் பெற்று ஆயுதங்கள் கொள்வனவு செய்தமையை சிறிலங்கா அரசாங்கத்தின் நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கைப் பொருளாதாரம் வெளிநாட்டு கையிருப்பு மீது முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் உண்டியல் கருப்புச் சந்தை பண கொடுக்கல் வாங்கல் முறைமை நியாயமானது என்ற வகையிலும் அந்த செவ்வியில் பசில் ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கருப்புச் சந்தையில் பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து ஆயுதம் வாங்கியதை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எரிபொருள் ஏற்றுமதிக்கு டொலர்கள் தேவைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஏனைய அதிகாரிகளுடன் கொழும்பில் உள்ள புறக்கோட்டைக்குச் சென்று வர்த்தகர்களிடம் டொலர்களை திரட்டியதாகவும் தெரிவித்தார்.
மேலும் அதே காலப்பகுதியில் எரிபொருளுக்கு செலுத்துவதற்காக இலங்கை கருப்புச் சந்தையில் இருந்து டொலர்களைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டார்.
இவ்வாறான கொள்வனவுகள் தொடர்பாக இலங்கை அதிகாரிகள் பல வருடங்களாக மறுத்து வந்த நிலையில் அவரின் இந்த கருத்து உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆயுதங்கள் உட்பட அணுவாயுத பரிசோதனை காரணமாக ஐ.நா.வின் வர்த்தக தடையை எதிர்கொண்டுள்ள வட கொரியாவிடம் இருந்து தடைகளை மீறி சிறிலங்கா அரசாங்கம் இந்த கொள்வனவை மேற்கொண்டுள்ளதை பசில் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.