இலங்கையில் நெல் விவசாய செய்கையில் இழப்பை எதிர்நோக்கியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு இந்த வாரம் அறிவித்துள்ளது. ஆனால் இது உண்மையாகவே விவசாயிகளுக்கு உதவியாக இருக்குமா?
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40 ஆயிரம் மில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சுமார் 10 லட்சத்து 49 ஆயிரம் விவசாயிகள், 2020ம் ஆண்டு பெரும்போகத்தில் 8 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் விவசாய செய்கையை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு நெல் விவசாய செய்கையில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சன தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், விவசாய சேவை திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து, பிரதேச ரீதியில் விவசாயிகளின் விவசாய செய்கை குறித்து ஆராய்ந்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
பெரும்போகத்தில் விவசாயிகளின் விளைச்சலை பெற்றுக்கொண்டதன் பின்னர், அதனூடாக அவர்களுக்கு ஏற்படும் நட்டத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஏன் இழப்பீடு?
இலங்கையில் நஞ்சற்ற இயற்கை உணவை உற்பத்தி செய்யும் திட்டத்தை, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அமல்படுத்தியிருந்தது.
இதன்படி, விவசாய நிலங்களுக்கு செய்கை உர பயன்பாட்டை முற்றாக தடை செய்த அரசாங்கம், இயற்கை உரத்தை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பெரும்போகத்தை ஆரம்பித்த விவசாயிகள், இயற்கை உரத்தை பயன்படுத்த முயற்சித்த போதிலும், அது வெற்றியளிக்கவில்லை.
இயற்கை உரம் கிடைக்காத அதேவேளை, செயற்கை உரத்திற்கு தடை விதித்தமையினால், அதுவும் கிடைக்காது விவசாயிகள் பெரும் இழப்பை எதிர்நோக்கினர்.
இதனால், விவசாய நடவடிக்கைகள் முற்று முழுதாக பாதிக்கப்பட்டு, பெரும்பாலான விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தை கூட இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
இயற்கை உர பயன்பாட்டை கட்டாயப்படுத்தி, விளைச்சலை இல்லாது செய்தமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்று, தமக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவ்வாறான கோரிக்கைகள் வலுப்பெற்ற நிலையிலேயே, அரசாங்கம் இந்த இழப்பீடு வழங்கும் தீர்மானத்தை எட்டியுள்ளது.
அரசாங்கம் விவசாயிகளுக்கு உரிய முறையில் நட்டஈட்டை வழங்காவிட்டால், விவசாயிகள் எதிர்வரும் பெரும்போகத்தில் விவசாயத்தை மேற்கொள்ளமாட்டார்கள் என வளலவாய் விவசாய அமைப்பின் தலைவர் எம்.ஐ. சியாத் தெரிவிக்கின்றார்.இம்முறை பெரும்போகத்தில் தாம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்."வழமையாக ஒரு ஏக்கருக்கு 40 முதல் 45 மூட்டைகள் வரை அறுவடை செய்யவோம். ஆனால், இம்முறை 15 முதல் 20 மூட்டைகளே விளைச்சல் காணப்பட்டது. இந்த பாதிப்புக்களுக்கும் நட்டஈடு தருவதாக சொன்னாங்க. எப்படியோ தெரியாது. இந்த முறை நட்டஈடு தராவிட்டால், அடுத்த போகத்தை விவசாயிகளினால் செய்ய முடியாது. நடுத்தர விவசாயிகள் முதலீடு செய்ய பயந்துள்ளார்கள்" என அவர் குறிப்பிட்டார்
சவால்கள் என்ன?
நெல் அறுவடையை ஆராய்ந்து, விளைச்சலில் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்யும் வகையிலேயே நட்டஈடு வழங்கவுள்ளதாக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது, காலம் கடந்த அறிவிப்பாகவே காணப்படுகின்றது என ஓய்வூப் பெற்ற பிரதி விவசாய பணிப்பாளர் பத்மநாதன் சத்தியமூர்த்தி பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகள், ஏனைய மாகாணங்களுக்கு முன்பே, பெரும்போக அறுவடையை செய்து விடுவார்கள் என அவர் கூறுகின்றார்.
இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மொத்த விவசாய நிலத்தில் 60 வீதத்திற்கும் அதிகமான நிலங்களில் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், அறுவடையை ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் எவ்வாறு இழப்பீடு வழங்கும் என அவர் கேள்வி எழுப்புகின்றார்.
இவ்வாறு அறுவடைகளை முடித்த விவசாயிகளுக்கு உத்தேச அடிப்படையிலேயே, நஷ்டஈட்டை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என கூறிய அவர், அவ்வாறான விவசாயிகளுக்கு உண்மையாக நட்டத்தை ஈடு செய்யும் வகையிலான இழப்பீடு கிடைக்காது எனவும் குறிப்பிட்டார்.
''வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 60 முதல் 65 வீதமான அறுவடை முடிந்தது. இனி வாய் மொழி மூலமான தகவல்களை எடுக்கலாமே தவிர, உரிய தகவல்களை எடுக்க முடியாது. நிலங்களை புள்ளவிபரவியல் திணைக்களம் அளந்து, அதனூடாகவே மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதற்கு உரிய காலம் போயிட்டது. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் 50 வீதத்திற்கு அதிகமான நிலப்பரப்பு அறுவடை செய்தாச்சு. சும்மா மதிப்பீடு அடிப்படையில் இழப்பீடு கொடுக்கலாமே தவிர, சரியான மதிப்பீடு செய்யும் காலம் போயிட்டது. தற்போது அறுவடை செய்யவுள்ளவர்கள், உரத்தை பயன்படுத்தி செய்கை செய்தவர்கள். இதை மதிப்பீடு செய்யும் போது, விளைச்சல் அதிகம் என்றே காண்பிக்கும்" என அவர் கூறினார்.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.