இலங்கையில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்; நாடு முடக்கப்படுமா?
29 Jan,2022
இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மிகவேகமாக பரவுவதன் காரணமாக நாட்டை முடக்கிவிடுமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தனிநபர்களிடமிருந்தும் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறுகையில்,
நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எனினும், நாட்டை முடக்குவதற்கு இத்தருணத்தில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது.
நாடு திறந்திருக்கும் போதே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுவது அதிகரித்தாலும், அந்த நோயாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தொற்றாளர்களில் 80 சதவீதமானவர்கள் வீடுகளிலேயே தடுத்துவைத்து சிகிச்சையளிக்க இயலுமாக உள்ளதாகவும் அவர் கூறினார். எனவே கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால் சகலரும் மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.