நிதியத்தின் உதவி இலங்கைக்கு அவசியமில்லை - மத்திய வங்கி ஆளுநர் வெளிப்படை
26 Jan,2022
சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஒத்துழைப்பு இலங்கைக்கு அவசியமில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்(Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.
இலங்கையிடம் மாற்று மூலோபாய உத்தி காணப்படுமாயின் நிவாரணம் அவசியமில்லை எனவும், அடுத்த ஓரிரு வருடங்களில் அதை மிகவும் நிலையானதாக மாற்றுவதற்கான உத்தி தம்மிடம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தனது நிலுவையில் உள்ள கடனுக்கு, குறிப்பாக சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களுக்கு அமைய கடன் தருனர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அதனை மீளளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ரால் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி தலையீடுகளின் பாதிப்பை தணிக்க இலங்கைக்கு ஒத்துழைப்பு தேவைப்படலாம் என அண்மையில் சர்வதேச நிறுவனங்கள் எச்சரித்திருந்தன.
எனினும், அஜித் நிவார்ட் கப்ரால் அந்த விடயத்தை நிராகரித்துள்ளதோடு, அவை பக்கச்சார்பான மதிப்பீடு என குற்றஞ்சாட்டியிருந்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை அணுக வேண்டிய அவசியமில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் வாதிட்டார்.
குறிப்பாக குறுகிய காலத்தில் அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி உரிய தீர்வுகளை கண்டறியுமெனின், சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய அவசியமில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மேலும் தெரிவித்துள்ளார்.