அரசியல் தீர்வு இப்போது அவசியமில்லை!
24 Jan,2022
அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அல்ல. அதைவிட அவர்களின் அத்தியாவசிய தேவைகளைத் தீர்ப்பதே முக்கியம். அவற்றைத் தீர்த்து வைப்பது தொடர்பிலேயே முதலில் நாம் கவனம் செலுத்துகின்றோம் என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
“திறந்த மனதுடன் தமிழர் தரப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி தலைமையிலான அரசு தயார் நிலையில் உள்ளது. அந்தப் பேச்சு விரைவில் ஆரம்பிக்கப்படும். அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினை அல்ல. அதைவிட அவர்களின் அத்தியாவசிய தேவைகளே முக்கியம்.
எனவே, முதலில் அத்தியாவசிய தேவைகளுக்கு - அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் திட்டமாக உள்ளது. இவற்றுக்கு முதலில் தீர்வு கண்டால் அரசியல் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காணமுடியும்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்தி இனவாத ரீதியில் செயற்பட அவர்கள் முற்படக்கூடாது. நாட்டை முன்நகர்த்தும் செயற்பாடுகளுக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.