அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கோலிவில்லே என்ற இடத்தில் பெத் இஸ்ரேல் என்ற யூத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தளத்தில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதி அங்கு பிரார்த்தனை செய்துகொண்டிருந்த 4 யூதர்களை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, எஃப்.பி.ஐ. அதிரடி படையினர் பெத் இஸ்ரேல் வழிபாட்டு தலத்தை சுற்றி வளைத்தனர். அதேவேளை பிணைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமானால், டெக்சாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பெண் பயங்கரவாதி ஆபியா சித்திக்கை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கிற்கு அல்கொய்தா இயக்கத்துடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இவரை 2018 -ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் வைத்து அமெரிக்க பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அமெரிக்க படையினர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து அவர்களை சுட முயற்சித்துள்ளார். அப்போது, கைது செய்யப்பட்ட அவர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். ஆபியா சித்திக் ‘பெண் அல்கொய்தா’ என்று அழைக்கப்பட்டார்.
தற்போது டெக்சாஸ் சிறையில் உள்ள பெண் அல்கொய்தா ஆபியா சித்திக்கை விடுதலை செய்யக்கோரி அந்த பயங்கரவாதி யூதர்களை சிறைபிடித்து வைத்தார். சுமார் 11 மணி நேரம் இந்த நடைபெற்ற மீட்பு முயற்சிக்கு பின்னர் பிணைக்கைதிகளாக இருந்த 4 யூதர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்த மீட்பு நடவடிக்கை எவ்வாறு நடைபெற்றது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
முதலில் ஒரு பிணைக்கைதியை பயங்கரவாதி விடுதலை செய்துள்ளான். ஆனால், எஞ்சிய 3 பிணைக்கைதிகளை விடுதலை செய்யவில்லை. இதனை தொடர்ந்து எப்பிஐ போலீசாரின் சிறப்புப்படைப்பிரிவான ஸ்வாட் குழுவினர் பிணைக்கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெத் இஸ்ரேல் மத வழிபாட்டுத்தளத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.
அங்கு பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருந்த பயங்கரவாதியை கண் இமைக்கும் நேரத்தில் சுட்டுக்கொன்றனர். அதன் பின்னர் பிணைக்கைதிகளாக இருந்த எஞ்சிய 3 யூதர்களையும் ஸ்டாவ் பிரிவினர் மீட்டனர்.
இந்நிலையில், பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருந்த பயங்கரவாதி யார்? என்ற் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
முதலில், ஆபியா சித்திக்கின் சகோதரனான முகமது சித்திக்கே இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த பயங்கரவாத செயலுக்கும் முகமது சித்திக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த நிலையில், பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருந்தது இங்கிலாந்தை சேர்ந்த பயங்கரவாதி என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை மாலிக் பைசல் அக்ரம் என்ற 44 வயது நபரே இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பயங்கரவாதி மாலிக் இங்கிலாந்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அமெரிக்காவுக்கு வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, கொல்லப்பட்ட பயங்கரவாதி மாலிக் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மாலிக்குடன் தொடர்பில் இருந்த 2 நபர்கள் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.