வரலாற்றை மாற்றியெழுத திட்டம் - பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்
16 Jan,2022
ராஜபக்ச தரப்புக்கு எதிர் சக்தியாக முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் அணியொன்று எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம (kumara welgama) கூறியுள்ளார்.
ஜனநாயகம், மனிதாபிமான பண்புகள் நிறைந்த அரசியல் கலாசாரமொன்றையும் அனைவரும் சமத்துவமாக வாழும் அமைதியான சூழல் ஒன்றையும் கட்டியெழுப்புவதற்கு, சமூகத்தினை வழிநடத்தக்கூடிய அரசியல் கட்சியொன்று அவசியமாக இருக்கின்றது.
அந்த வெற்றிடத்தினைப் பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காகவே இப்புதிய அரசியல் சக்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக குமாரவெல்கம கூறியுள்ளார்.
எமது கொள்கைகளையும், இலக்குகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் எம்முடன் இணைந்து பயணிக்க முடியும் எனவும், அவ்விதமானவர்களுக்காக எமது கதவுகள் திறந்தே இருக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க இருக்கவுள்ளதோடு, குமார் வெல்கம, அர்ஜுண ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ஒருங்கிணையவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அணியானது குமார வெல்கம தலைமையில் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சியான புதிய லங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் வகையில் செயற்படவுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.