கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகள்; இந்தியாவுக்கு அளிக்கிறது இலங்கை
01 Jan,2022
இந்தியாவுக்கு 14 பிரமாண்ட கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை 50 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்குவதாக, அண்டை நாடான இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது இலங்கையின் திரிகோணமலையில் பிரமாண்டமான எண்ணெய் தொட்டிகள் கட்டப்பட்டு, அவற்றில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டது. பிரிட்டன் கடற்படை கப்பல்கள், போர் விமானங்கள் ஆகியவை இங்கு வந்து எரிபொருளை நிரப்பிச் சென்றன.
இது குறித்து இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் உதயா கம்மன்பிலா கூறியதாவது:திரிகோணமலையில் உள்ள பிரமாண்ட எண்ணெய் தொட்டிகள் இரண்டாம் உலகப் போரில் எரிபொருள் சப்ளைக்கு பயன்படுத்தப் பட்டன. இந்த எண்ணெய் தொட்டிகளை பயன்படுத்துவது தொடர்பாக 2002ல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போதுள்ள 99 எண்ணெய் தொட்டிகளில், 14 தொட்டிகள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படும். பொருளாதார நெருக்கடிஇதற்கு இலங்கை அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் அடுத்த வாரம் கையொப்பமாக உள்ளது. இது தவிர சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைந்து உருவாக்கும் நிறுவனம் 61 எண்ணெய் தொட்டிகளை நிர்வகிக்கும். இந்த நிறுவனத்தில் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 51 சதவீத பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை கொடுக்க முடியாமல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூடி விட்டது. இதையடுத்து இந்தியாவிடம் கடன் அடிப்படையில் எண்ணெய் தரும்படி பேச்சு நடத்தி வருகிறது.