வெளிநாட்டவர் திருமணம் செய்ய ஏன் அனுமதி பெறவேண்டும்? வெளியானது அறிவிப்பு
28 Dec,2021
ஸ்ரீலங்காவிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்கள் தமது வாழ்க்கைத் துணையின் விசாவைப் பயன்படுத்தி நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாலேயே, வெளிநாட்டுப் பிரஜையைத் திருமணம் செய்து கொள்வதற்குப் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெறப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதாக, ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி.காசிலிங்கம்(G. Kasilingam) தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி நாட்டிற்குள் அடிப்படைவாதம் வேரூன்றுவதைத் தடுப்பதற்கு ஸ்ரீலங்கா மக்கள் திருமணம் செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து தடைநீக்கல் சான்றைப் பெற்றுக்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் அனைத்து ஸ்ரீலங்கா பிரஜைகளும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கை, தனிநபர் உரிமையில் அநாவசியமாகத் தலையீடு செய்யும் வகையில் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் இந்தத் தீர்மானத்திற்கான காரணம் தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவின் ஊடாக வழங்கியிருக்கும் விளக்கத்திலேயே ஸ்ரீலங்கா பிரதமரின் ஒருங்கிணைப்புச்செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்கள் தமது வாழ்க்கைத்துணையின் விசாவைப் பயன்படுத்தி நாட்டில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளமை இத்தீர்மானத்திற்கான முக்கிய காரணமென பாதுகாப்புத்தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல், சமூகவலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகள் என்பனவும் இதில் உள்ளடங்குகின்றன. இவ்வாறான திருமணங்களுக்காக வறிய பெண்களே இலக்குவைக்கப்படுகின்றார்கள்.
அதுமாத்திரமன்றி நாட்டிற்குள் அடிப்படைவாதம் வேரூன்றுவதைத் தடுப்பதற்கு ஸ்ரீலங்கா பிரஜைகளைத் திருமணம் செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து தடைநீக்கல் சான்றைப் பெற்றுக்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய உள்நாட்டுப் பிரஜையொருவர் வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்யவிருக்கும் பட்சத்தில், அவர் பதிவாளர் திணைக்களத்திடம் பாதுகாப்புசார் ஆவணமொன்றைக் கையளிக்கவேண்டும். அந்த ஆவணம் பதிவாளர் திணைக்களத்தினால் பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பப்பட்டு, குறித்த வெளிநாட்டவர் எவ்வித குற்றச்செயல்களுடனும் தொடர்புபட்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்று வழங்கப்படும்.
அதுமாத்திரமன்றி சுகாதாரச்சான்றிதழ் ஒன்றும் கையளிக்கப்படவேண்டும். அவற்றின் பிரகாரம் தடைநீக்கல் சான்று வழங்கப்பட்டதன் பின்னர், சம்பந்தப்பட்ட இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை பதிவாளர் நாயகம் அவர்களுக்கு அறியத்தருவார்.
இந்த நடைமுறை பல்வேறு நாடுகளாலும் கடைப்பிடிக்கப்படுவதுடன் இது தேசிய பாதுகாப்பையும் நாட்டுமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதை முன்னிறுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறையாகும் என அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.