வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு முக்கிய தகவல்!
25 Dec,2021
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களினால் நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கு, மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, டொலர் ஒன்றுக்கு 10 ரூபா என்ற மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத காலப்பகுதியில், இதுவரையிலும் வெளிநாடுகளில் தொழில்புரிபவர்களின் பணவனுப்பல்களில் அவதானிக்கப்பட்ட சாதகமான முன்னேற்றங்களுக்கு பதிலிறுத்தும் விதத்திலேயே, அமெரிக்க டொலர் ஒன்றிற்கு 10 ரூபா என்ற மேலதிக ஊக்குவிப்பினை தொடர்ந்தும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கையர்கள், பணப்பரிமாற்று நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்புகின்றபோது, அவர்களுக்கு ஏற்படுகின்ற பரிமாற்றுச் செலவினை, வரையறை செய்யப்பட்ட மட்டமொன்று வரை ஏற்றுக்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற பாரிய எண்ணிக்கையிலானோர், எவ்விதக் கட்டணமுமின்றி தமது பணத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடியதாக இருக்கும்.
இந்த நடவடிக்கை ஆரம்பிக்கும் திகதி உள்ளடங்கலாக இது தொடர்பிலான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் விரைவில் வழங்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.