பிரசவத்தின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் அறுவை சிசிக்சைகளின்போது பௌத்த, சிங்களப் பெண்களுக்கு - மோசடியாக கருத்தடை செய்தார் என்பது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 60 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்ட டாக்டர் எஸ்.எம்.எம். ஷாபி என்பவரை, மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறும், அவர் கட்டாய விடுமுறையில் (Compulsory leave) அனுப்பப்பட்டிருந்த காலப் பகுதிக்குரிய சம்பளத்தை, அவருக்கு வழங்குமாறும் சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச். முனசிங்க அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
குருணாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவம் மற்றும் பெண்ணியல் நோய் மூத்த மருத்துவராக கடமையாற்றி வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் டாக்டர் ஷாபி கைது செய்யப்பட்டார்.
மேற்படி மருத்துவரை கைது செய்யும்போது, வருமானத்துக்கு அதிகமான முறையில் சொத்துக்களைச் சேர்த்தார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையிலே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும், அதன் பின்னர் - ஆயிரக் கணக்கான பெண்களுக்கு மோசடியாக கருத்தடை செய்தார் என்றும் பயங்கரவாத அமைப்புக்களிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொண்டு அந்த அமைப்புக்களின் நோக்கங்களை நிறைவேற்றினார் எனவும் டாக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அரச வைத்தியசாலையில் குழந்தைப் பேறுகளுக்காக சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பௌத்த, சிங்களப் பெண்களுக்கு - அவர்கள் அறியாத வகையில் டாக்டர் ஷாபி மோசடியாக கருத்தடை செய்தார் என, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, இனங்களுக்கிடையில் அப்போது பதற்றத்தினை ஏற்படுத்தியிருந்தது.
பின்னணி என்ன?
டாக்டர் ஷாபி கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், பிரபல சிங்களப் பத்திரிகையொன்றில் 'குருணாகல் வைத்தியசாலையில் சிசேரியன் அறுவை சிகிச்சையின் பின்னர், தௌஹீத் ஜமாஅத் டாக்டர் ஒருவரால் பௌத்த சிங்களப் பெண்கள் 4 ஆயிரம் பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டது' எனும் தலைப்பில் செய்தியொன்று வெளியானது.
மறுநாள், பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் (தற்போது இவர் ராஜாங்க அமைச்சராக உள்ளார்), தனது பேஸ்புக் பக்கத்தில் டாக்டர் ஷாபியின் படத்தை வெளியிட்டு, மேற்படி பத்திரிகைச் செய்தியில் சொல்லப்பட்டிருக்கும் டாக்டர் இவர்தான் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இந்த விவகாரம் ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக மாறியதோடு, நாடு முழுவதும் இந்தக் கதை வேகமாகப் பரவியது.
சிசேரியன்
இதனையடுத்து மேற்படி பத்திரிகைச் செய்தி வெளியாகி இரண்டாம் நாள், அதாவது 2019ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதியன்று, டாக்டர் ஷாபி கைது செய்யப்பட்டார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே டாக்டர் ஷாபி கைது செய்யப்பட்டதாக அப்போதைய போலீஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் ஆயிரக் கணக்கான பெண்களுக்கு டாக்டர் ஷாபி மோசடியான முறையில் கருத்தடை செய்தார் என, சில ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடப்பட்டு வந்ததோடு, இது தொடர்பில் நாடாளுமன்றிலும் கேள்வியெழுப்பப்பட்டது.
இந்தப் பின்னணியில், டாக்டர் ஷாபியினால் மோசடியாக கருத்தடை செய்யப்பட்டோர் இருந்தால், அது தொடர்பாக பாதிக்கப்பட்டோர் முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். அதனையடுத்து அவருக்கு எதிராக நூற்றுக்கணக்கான பெண்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட டாக்டர் ஷாபி, குற்றத் தடுப்பு திணைக்களத்தின் கீழ் 46 நாட்களும், சிறைச்சாலையில் 14 நாட்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவர் கைது செய்யப்பட்டமையை அடுத்து, அவரின் பணியிலிருந்து கட்டாய விடுமுறையில் (Compulsory leave) அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
போதிய ஆதாரங்கள் இன்மையால் பிணை
டாக்டர் ஷாபிக்கு எதிராக குருணாகல் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிந்த நிலையில், அவர் மோசடியாக கருத்தடை செய்தார் என 615 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரச தரப்பு சார்பாகத் அறிவிக்கப்பட்டது.
இருந்தபோதும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடையாது என, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் டாக்டர் ஷாபிக்கு பிணை வழங்குவதற்கு - அரசு தரப்பில் ஆட்சேபனைகளும் வெளியிடப்படவில்லை.
இவற்றினையடுத்து 2019ஆம் ஆண்டு ஜுலை 25ஆம் திகதியன்று குருணாகல் பிரதான நீதவான் நீதிமன்றம், டாக்டர் ஷாபியை பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டது.
டாக்டர் ஷாபி கருத்து
மூன்று பிள்ளைகளின் தந்தையான டாக்டர் ஷாபியின் மனைவியும் வைத்தியராவார்.
தனது பணிக் காலத்தில் மொத்தமாக 7 ஆயிரத்துக்கும் அதிகமான சிசேரியன் அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளதாக டாக்டர் ஷாபி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
4 ஆயிரம் பெண்களுக்கு மோசடியாக கருத்தடை செய்யப்பட்டதாக பத்திரிகையொன்றில் வெளியான செய்தியை, தன்னுடன் தொடர்புபடுத்தி பேஸ்புக்கில் எழுதிய பேராசிரியர் ஒருவருக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு தான் தீர்மானித்திருந்த சந்தர்ப்பத்திலேயே, தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாகவும் டாக்டர் ஷாபி கூறினார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என, நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையினால், தனக்கு பிணை கிடைத்த பின்னர் - அந்த வழக்கு மீளவும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை எனவும் டாக்டர் ஷாபி பிபிசியிடம் குறிப்பிட்டார்.
இதேவேளை, சுகாதார அமைச்சின் செயலாளரால் அனுப்பப்பட்ட மேற்படி கடிதமோ, சேவையில் இணையுமாறு அறிவித்தல்களோ, தனக்கு கிடைக்கவில்லை (நேற்று 17ஆம் திகதிவரை) எனவும் அவர் கூறினார்.
டாக்டர் ஷாபி பிணையில் விடுவிக்கப்பட்டமையை அடுத்து, தன்னை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு கோரி, சுகாதார அமைச்சின் செயலாளர் ஊடாக - அரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவை ஆணைக்குழுவுக்கு கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளில் சிக்குவதற்கு முன்னரான காலப்பகுதியில், அதாவது 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, குருணாகல் மாவட்டத்தில் டாக்டர் ஷாபி போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாறுபட்ட அறிக்கை
இந்தப் பின்னணியில், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட டாக்டர் ஷாபியை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறும், அந்தக் காலப்பகுதிக்குரிய சம்பளத்தை வழங்குமாறும் சுகாதார அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ள நிலையில், அவரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான எவ்வித ஆலோசனைகளையும் பெறுவதற்கான கோரிக்கைகள் தம்மிடம் முன்வைக்கப்படவில்லை என அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.ஏ.பீ. தயா செனரத் தெரிவித்துள்ளார்.
டாக்டர் எஸ்.எஸ்.எம். ஷாபியின் நிலுவை சம்பளத்தை வழங்குவது குறித்தோ அல்லது அவரை மீள சேவையில் இணைத்துக்கொள்வது குறித்தோ சுகாதார அமைச்சு அல்லது அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தம்மிடம் இதுவரை ஆலோசனைகளை பெறுவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் ஷாபி தொடர்பில் அவ்வாறான எந்தவொரு ஆலோசனைகளையும் அரசாங்க சேவை ஆணைக்குழுவோ அல்லது சுகாதார சேவை ஆணைக்குழுவோ வெளியிடவில்லை என்றும் அறிக்கையொன்றின் ஊடாக அவர் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அதிகாரிகளை மீள சேவையில் இணைத்துக் கொள்ளும் விதம் தொடர்பிலான சரத்துக்கள், நிறுவன கட்டளை சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளமையினால், அதன் பிரகாரம் செயற்படுவதற்கு அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது எனவும் அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.