சிறிலங்கா அரசாங்கத்தின் போக்கில், புதிய மோதல்களை தோற்றுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா பல நெருக்கடிகளுக்கு மத்தியில், அது பயணிக்கும்பாதையில் அதிகரித்து வரும் எதேச்சாதிகாரம் மற்றும் இராணுவமயமாக்கப்பட்ட ஆட்சி, தமிழ், முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ சமூகங்கள் மேலும் ஓரங்கட்டப்படுவது, மக்களை சூழ்ந்துள்ள பொருளாதார சவால்கள் என்பன நாட்டில் புதிய மோதல்களை விதைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச சமூகத்தின் நம்பகமான உறுப்பினராக சிறிலங்காவின் நம்பகத்தன்மை அண்மைய ஆண்டுகளில் தேய்ந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் அடித்தளமாக காணப்படுவதால் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் யதார்த்தம் நிலைமை இதனை இன்னும் மோசமாக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் தினத்தைக் குறிக்கும் வகையில், அமெரிக்க அரசாங்கம் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மீது தடைகளை விதித்துள்ளது.
இந்த இரண்டு அதிகாரிகளுக்கும் அமெரிக்கா வித்த தடையானது, தனிப்பட்ட அதிகாரிகள் மீதான அதன் நேரடி தாக்கத்தை விட, சிறிலங்கா தலைமைக்கு தெரிவிக்கும் செய்தியாகவே அமைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகின்ற நிலையில், சர்வாதிகாரம், இராணுவமயமாக்கல், மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசு அனுமதித்த வன்முறை ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் ஆட்சிகள் பல முனைகளில் அவதானிக்கப்படலாம் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமின்றி, சிறிலங்கா சர்வதேச அவதானிப்பில் காணப்படுவதாகவும், உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
பல நாடுகளுடனான தனது அண்மைய சந்திப்புகளின் ஊடாக ஒரே மாதிரியான உணர்வுகள் மற்றும் சிறிலங்காவை பாதிக்கும் பல பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க விருப்பம் காணப்படுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், பல தசாப்தகால அரசியல் மோதலைத் தீர்ப்பதில் ஒத்துழைத்தல் மற்றும் மக்கள் தங்களின் பொருளாதார சவால்களை சமாளிக்க உதவும் முயற்சிகளை மேற்கொள்வது போன்ற விடயங்களில் இணைந்து பணியாற்றுவதன் அவசியமும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிக்கப்படும் செய்திகளை ஆழமாகப் பிரதிபலிக்குமாறும், நீண்டகால நலனுடன் அர்த்தமுள்ள மாற்றத்திற்கான அவசியத்தை வலியுறுத்துமாறும் சிறிலங்கா மக்கள் மற்றும் அவர்களது அரசியல் தலைமைகளுக்கு உலகத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
சிறிலங்காவின் பலதரப்பட்ட சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான உண்மையான மற்றும் அர்த்தமுள்ள எந்தவொரு முயற்சியிலும் உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட புலம்பெயர் சமூகங்களின் பெரும் பகுதியினர் தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.