உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சதி முயற்சியால் ஆட்சியை கைப்பற்றினாரா கோட்டாபய?
16 Dec,2021
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியென அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சித்தரிக்கும் வெட்கமற்ற செயற்பாடுகளில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல்(ஓய்வு) கமல் குணரட்ன (Kamal Gunaratne) தெரிவித்துள்ளார்.
அரச தலைவரது ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சஹ்ரான் ஹாசிமுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதாக தெரிவிக்கப்படுவதையும் முற்றாக நிராகரித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
''அரச தலைவரை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியென சித்தரிப்பதற்கு எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.
இத்தாக்குதல் மூலம் சதி முயற்சியை மேற்கொண்டு அரச தலைவர் ஆட்சியைக் கைப்பற்றினாரென்ற அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேட முயல்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ஒரு துன்பகரமான செயலாகும். குண்டுவெடிப்புகள் எந்த கட்சி பேதங்களுமின்றி அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன. அதனால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக எவரும் குண்டுவெடிப்புக்களை நடத்தப்போவதில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல், நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
அது தொடர்பில் பெருமளவிலானோர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் சிலர் விடுதலைசெய்யப்பட்டும் மேலும் பலர் தொடர்ந்து விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டும் வருகின்றனர் என்றார்.