புலிகளின் சித்தாந்தத்தினால் அச்சுறுத்தல்!
12 Dec,2021
பயங்கரவாதம் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில், போராடிப் பெற்ற சமாதானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில சக்திகள் நாட்டில் செயற்படுகின்றன. இந்த சமூக விரோதிகள் இனங்களுக்கு இடையில் அவநம்பிக்கை மற்றும் பிளவு மனப்பாங்கை ஏற்படுத்த முயற்சிக்கிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக எழும் பேரபாயங்களை தடுப்பதற்காக, சாத்தியமான அச்சுறுத்தல்கள் பற்றிய ஆழமான பகுப்பாய்வுகளை மேற்கொள்வதும், தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு எதிரான எதிர் நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்குவதும் நமது பாரிய பொறுப்பாகும்.
நட்பு நாடுகளின் புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வதானது பேரபாயங்களை எதிர்த்துப் போராடுவதில் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது.
சமகால சூழலில் உருவாகக்கூடிய சாத்தியமான அச்சுறுத்தல்களை மதிப்பிடுவதற்கு புவிசார் அரசியல் சூழலின் நிலையான மற்றும் தொடர்ச்சியான மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு அவசியமாகும்.
வெளிநாட்டில் உள்ள புலிகளுக்கு ஆதரவான சக்திகள் மற்றும் அதன் மறைமுக ஆதரவான உள்ளூர் சக்திகள் விடுதலைப் புலிகளின் கோரிக்கையான பிரிவினைவாத சித்தாந்தத்தை கொண்டிருப்பதனால் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் மூலம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.